அனைத்து PT-06 ரக விமானங்களையும் இலங்கை விமானப்படை இடைநிறுத்தியது!
திருகோணமலை சீனன்குடாவில் நேற்று (07) இடம்பெற்ற விமான விபத்தை அடுத்து, அனைத்து PT-06 ரகத்தைச் சேர்ந்த விமானங்களையும் இலங்கை விமானப்படை இடைநிறுத்தியுள்ளது.
திருகோணமலை சீனன்குடாவில் நேற்று (07) இடம்பெற்ற விமான விபத்தை அடுத்து, அனைத்து PT-06 ரகத்தைச் சேர்ந்த விமானங்களையும் இலங்கை விமானப்படை இடைநிறுத்தியுள்ளது.
விபத்து தொடர்பில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஸல் உதேனி ராஜபக்சவினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், அந்த குழுவின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில், விமானங்கள் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படையின் , PT-06 ரக பயிற்சி விமானம் ஒன்று நேற்று முற்பகல் 11.30 அளவில் புறப்பட்ட சில நிமிடங்களில் சீனன்குடா விமானப்படையின் கல்லூரி மைதானத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஃப்ளைட் லெப்டினன்ட் தரிது ஹேரத் உட்பட இரண்டு விமானப் படை சிப்பாய்கள் உயிரிழந்தனர்.
சீனத் தயாரிப்பான PT-06 ரக பயிற்சி விமானங்களில் 6 விமானங்களை இலங்கை விமானப்படை 2018 ஆம் ஆண்டு கொள்வனவு செய்வதற்கு இலங்கை தேசிய பாதுகாப்பு சபை அனுமதி வழங்கியது.
இதற்காக 5 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி வழங்கப்பட்டது.
2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குறித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், ஒருவர் உயிரிழந்தார்.
இந்தநிலையில், 2012 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையின் இலக்கம் 12 ஜெட் படைக்கு சொந்தமான MIG 27 ரக போர் விமானம் கட்டுநாயக்கவிலிருந்து 17 கடல் மைல் தொலைவில் உள்ள தும்மலசூரியவில் விபத்துக்குள்ளான போது, அதில் பயணித்த ஃப்ளைட் லெப்டினன்ட் தரிது ஹேரத் பாதுகாப்பாக ஜெட் விமானத்தில் இருந்து வெளியேறி உயிர் தப்பினார்.
அதனைத் தொடர்ந்து விமானம் செயலிழந்து விபத்துக்குள்ளானது.