இலங்கைக்கான நிதி வசதி ஏற்பாட்டின் முதலாவது மீளாய்வுக் கூட்டம்  ஆரம்பம்!

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாடு குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வுக் கூட்டம் இன்று (14) இடம்பெற்றது.

இலங்கைக்கான நிதி வசதி ஏற்பாட்டின் முதலாவது மீளாய்வுக் கூட்டம்  ஆரம்பம்!

ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றதாக அதன் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மீளாய்வு செயற்பாடுகளுக்கு அமைய இறுதிக் கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

வெளிநாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார். 

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு பெறுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன்படி, முதல் தவணையாக இலங்கைக்கு 330 மில்லியன் டொலர் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்டது.

தற்போது இடம்பெற்று வரும் சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வு கூட்டம் வெற்றியளிக்குமாயின் இலங்கைக்கு அடுத்ததாக 330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கப்பெறும்.