நடுநிலையான சிங்களவர்கள் சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கும் போது தென்னிலங்கையில் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள் - சமன் செனவிரத்ன!

நடுநிலையான சிங்களவர்கள் சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கின்ற போது அவர்கள் தென்பகுதி சிங்கள மக்களிடையே துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள் என இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் சமன் செனவிரத்ன தெரிவித்தார்.

நடுநிலையான சிங்களவர்கள் சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கும் போது தென்னிலங்கையில் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள் - சமன் செனவிரத்ன!

நடுநிலையான சிங்களவர்கள் சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கின்ற போது அவர்கள் தென்பகுதி சிங்கள மக்களிடையே துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள் என இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் சமன் செனவிரத்ன  தெரிவித்தார்.

இலங்கை தேசிய சமாதானப் பேரவையில் கடந்த 23 வருடங்களாகக் கடமையாற்றி அந்நிறுவனத்திலிருந்து விலகிச் செல்லும் சமன் செனவிரத்னவின் அர்ப்பணிப்புடனான சமாதான செயற்பாடுகளைப் பாராட்டி பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட சர்வோதய மத்திய பயிற்சி நிலையத்தில் நேற்று (26) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற  இந்த நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் இணைப்பாளர்களான ரஷிகா செனவிரத்ன, பாஸ்தேவன் உட்பட அனைத்து சமூகங்களையும் சேர்ந்த சமயப் பெரியார்கள்  அதன்  செயற்பாட்டாளர்கள்  கலந்து கொண்டனர்.

பாராட்டுக்களை ஏற்றுக் கொண்டு பிரியாவிடை நிகழ்வில் உரையாற்றிய சமன் செனவிரத்ன, "தென்பகுதி சிங்கள சமூகத்தைச் சேர்ந்த சமாதான செயற்பாட்டாளர்களான நாங்கள் வடக்குக்குச் செல்லும்போது அந்த மக்களும் நீங்கள் எங்களை வந்து பார்த்து விட்டுத்தான் செல்கிறீர்கள் ஆனால் ஒன்றும் செய்யவில்லை என்று எங்கள் மீது குறை காண்கிறார்கள்.

அதேபோல நாங்கள் தென்னிலங்கைக்குச் செல்லும் போது நீங்கள் தமிழ் மக்களையும் எல்ரீரீஈ ஐயும் பற்றி மட்டும்தான் பேசுகிறீர்கள். அதனால் நீங்கள் தென்னிலங்கை சிங்கள மக்களின் துரோகிகள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

எனவே, இரு பக்கங்களிலும் எங்களுக்குப் பாராட்டுக்கள் வரவேற்புக்கள் கிடைக்காத போதிலும் நாங்கள் எங்களது சமாதானத்துக்கான பயணத்தை நிறுத்தவில்லை. அதில் சோர்வடையவுமில்லை.

எனவே சமாதான விரும்பிகள் இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டும். 

சமாதான செயற்பாட்டில் சவால், அச்சுறுத்தல், பலம், பலவீனம் இருக்கும் அவற்றை பகுப்பாய்வு செய்து கொண்டு சமாதானத்தக்கான பயணத்தைத் தொடர வேண்டும் என்று மாவட்ட சர்வ மதப் பேரைவயில் இணைந்து சமாதானத்திற்காகப் பயணிக்கவிருக்கின்ற உங்களை நான் கேட்டுக் கொள்கின்றேன்” என்று தெரிவித்தார்.

 இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை சார்பில் அதன் இணைப்பாளர் ஆர். மனோகரன், இளைஞர் செயலணி சார்பில் விளையாட்டு துறைசார் உத்தியோகத்தர் கே. சங்கீதா உட்பட சர்வமத பிரமுகர்களும் தேசிய சமாதானப் பேரவையிலிருந்து 23 வருட கால பணியை நிறைவு செய்து கொண்டு செல்லும் அதன் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் சமன் செனவிரத்னவின் அர்ப்பணிப்புடனான சேவையைப் பாராட்டிப் பேசினர்.

நிகழ்ச்சியின் நிறைவில் அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.