அம்பலாங்கொடை பிடிகல பகுதிகளில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கான காரணம்  வெளியானது,

அம்பலாங்கொடை பிடிகல பகுதிகளில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கான காரணம்  வெளியானது,

அம்பலாங்கொடை மற்றும் பிடிகல பகுதிகளில்  இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கான காரணம்  தெரியவந்துள்ளது .
 
இரு குழுக்களால் இந்த துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
எவ்வாறாயினும், இரவு வேளைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதால், சிசிடிவி காணொளி காட்சிகளும் தெளிவாகத் தெரியவில்லை என விசாரணைகளை முன்னெடுத்து வரும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் போதைப்பொருள் தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும், பிடிகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம், நபர் ஒருவரைக் கொலை செய்தமைக்கான பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களிலும் 4 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த 5 பேர் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
பிடிகல - குருவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
இந்தநிலையில் அவர்களில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் நேற்று காலை உயிரிழந்தார்.
 
அவர் வர்த்தக நிலையமொன்றில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வந்திருந்த ஒருவரென தெரியவந்துள்ளது.
 
குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 அம்பலாங்கொடை கலகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய ஊழியரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் இலக்கு வைக்கப்பட்ட நபரும் வர்த்தக நிலைய உரிமையாளரின் 21 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளனர்.
 
அத்துடன், வர்த்தக நிலையத்தில் இருந்த மேலும் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
பிடிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்று அரை மணி நேரத்திற்குள் அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.