டிபெண்டரில் வந்து பொலிஸாரிடம் வாயாடிய மூன்று பெண்கள் பிணையில் விடுதலை!
பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி, டிபெண்டர் ரக வாகனத்தை ஆபத்தான முறையில் செலுத்திய நிலையில் கைதான 19 வயதுடைய யுவதிகள் மூவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி, டிபெண்டர் ரக வாகனத்தை ஆபத்தான முறையில் செலுத்திய நிலையில் கைதான 19 வயதுடைய யுவதிகள் மூவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருதானை பகுதியில் அதிவேகத்துடன் யுவதிகள் பயணித்த வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் தடையை ஏற்படுத்தியுள்ளனர்.
எனினும் அதனை செலுத்திய யுவதி, பொலிஸாரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாது வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
பின்னர் பொலிஸாரின் ஏனைய அவசர சேவைகளுக்கு அறிவித்தமையை தொடர்ந்து பிரிதொரு இடத்தில் வாகனம் மடக்கிப்பிடிக்கப்பட்டது.
அதனையடுத்து டிபெண்டர் வாகனத்தை செலுத்திய யுவதியிடம் விசாரணை நடத்த முற்பட்ட போது அவர் பொலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் வாகனத்தை செலுத்தியவரும் அவரோடு பயணித்த இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட யுவதிகள் நாவல மற்றும் கொழும்பில் வசிப்பவர்கள் என்பதோடு, பிரபல மகளிர் பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.