IMF பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்கபோவதில்லை - ஐக்கிய மக்கள் சக்தி

IMF பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்கபோவதில்லை - ஐக்கிய மக்கள் சக்தி

ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்கபோவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை  தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவுடன் எதிர்வரும் திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கான சந்திப்பொன்றுக்கு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர்களுடன் கட்சி ரீதியாக பிரத்தியேகமாக கலந்துரையாடவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலுக்கு அழைப்பு கிடைத்துள்ளது.

எனினும், இந்த சந்தர்ப்பத்தில் தாம் அந்த சந்திப்புக்கு செல்லவேண்டுமா என்பதில் சிக்கல் உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் தவணை நிதியை பெற வேண்டும் எனினும், பொதுமக்களைப் பாதிக்கும் விடயங்கள் செயல்படுத்தப்படக்கூடாது.

மக்களை ஒடுக்கும் இந்த வேலைத்திட்டத்தில் தங்களையும் இணைப்பதற்காக ஜனாதிபதி தமக்கு இந்த கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் கட்சியாக பங்கேற்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என அந்த கட்சியின் அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.