கிழக்கு மாகாணத்தில் புதிய சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு மத்திய நிலையம் - விஜயதாச ராஜபக்ஷ
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு – மாந்தீவு பகுதியில் புதிய சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு மத்திய நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கான சாத்திய கூறுகள் நிலவுவதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிக்கான களவிஜயத்தை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மாந்தீவு சுமார் 100 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாந்தீவில் தற்போது 2 தொழுநோயாளிகள் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கொவிட் காலத்தில் இலங்கை விமானப்படையால் கையகப்படுத்தப்பட்டு, கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட விமானப்படை அதிகாரிகளை தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை வழங்கியதாகவும், மேலும் சிறப்பாக அங்கு பணியாற்ற முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, சுகாதார அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தொழுநோயாளிகள் இருக்கும் இடத்துக்கு 2 தொழு நோயாளிகளையும் மாற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்த இடத்தில் சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு நிலையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.