டெல்லியில் 2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் - தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கு தொடர்பு? 

டெல்லியில் 2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் - தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கு தொடர்பு? 

டெல்லியியில் 50 கிலோ எடையுள்ள சூடோ பெட்ரைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த போதைப்பொருளை கடத்தி வந்த 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக போதை பொருள் கடத்தும் கும்பலை பிடிக்க நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து நூதன முறைகளில் அடிக்கடி போதை பொருள்கள் கடத்தப்படுவதும் அவை பிடிபடும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட சென்னை விமான நிலையத்தில் ரூ. 15 கோடி மதிப்புள்ள போதை பொருள் பிடிபட்டது. 

இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த அகமது இட்ரீஸ் (வயது 28) என்பவர் சுற்றுலா விசாவில் லாவோஸ் நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சென்னை வந்திருந்தார். 

அவரது செயல்பாடுகளில் சந்தேகம் இருந்ததால் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அவரை தீவிரமாக விசாரித்தனர். 

அவரிடம் இருந்து 15 கிலோ கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 

50 கிலோ போதை பொருள்: 

சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு போதை பொருள் கடத்தல் செயல்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், டெல்லியில் 50 கிலோ எடையுள்ள சூடோ பெட்ரைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த போதைப்பொருளை வெளிநாட்டிற்கு உணவு பொருள்கள் என்ற போர்வையில் கடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி) தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக பிடிப்பட்ட 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

2000 கோடி மதிப்பு: 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் தான் இந்த கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. 

எனவே அவரை பிடிப்பதற்கான முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது. 

தலைமறைவாக உள்ள அவரை தேடும் பணியில் டெல்லி பொலிஸாரின் சிறப்பு பிரிவோடு போதை பொருள் தடுப்பு பிரிவும் இணைந்து ஈடுபட்டுள்ளது. 

கடந்த 3 வருடங்களில் கிட்டத்தட்ட 45 முறை போதை பொருள்களை சர்வதேச சந்தைகளுக்கு கடத்தியிருப்பதாகவும் சுமார் 3,500 கிலோ இரசாயன போதை பொருளின் மதிப்பு 2 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என பிடிப்பட்ட கடத்தல் காரர்கள் தெரிவித்தனர். 

டெல்லியில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க ஏஜென்சியிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையில் இந்த கும்பல் சிக்கியுள்ளது" என்று என்சிபி அதிகாரிகள் தெரிவித்தனர். 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்: 

மெத்தம்படமைன் என்று அழைக்கப்படும் இந்த போதைப் பொருளுக்கு அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் கடும் கேள்வி இருப்பதாகவும் ஒரு கிலோ சுமார் 1.5 கோடி மதிப்பு இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர். 

இந்த போதை பொருள் அடங்கிய பொதிகளை வாங்குவதற்காக இருந்த நபர்களை பிடிப்பதற்காக நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகளையும் என்சிபி அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர்.