திரு.மென்டிஸ் அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்!

தேசியத்தலைவரின் பெயரைப் பெருமைக்காக உச்சரிக்கும் எம்மவர் மத்தியில் வரலாற்றில் எந்த ஒரு இனமும் பெற்றிராத ஒப்பற்ற தலைவரின் இலட்சியத்தின் நேர்மையை முள்ளிவாய்காலின் பின்னர் இழந்த தமிழரின் இறையாண்மையை உரிமைமை எம்மக்களிற்கு நினைவூட்டி உரமேற்றி எமை அழித்த ஆதிக்கசக்திகளின் அழுத்தங்களிற்கு அடிபணியாது உறுதியுடன் ஏற்ற பொறிமுறைகளூடாக எதிர்கொண்டு எமக்கு தோள்கொடுத்து நகரும் பண்பும் நேர்மையும் கொண்ட தலைவரின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு உளமாற செயலாற்றும் ஒரு சிங்களச்சகோதரன் ஐயா திரு. மெண்டிஸ் அவர்கள்.

திரு.மென்டிஸ் அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்!
A summary of Mr. Mendes' speech!

தமிழினப்படுகொலையை நடத்திய அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகளின் திட்டமிட்ட சதிவலைக்குள் பிரபாகரன் சிக்குவார் என உலகமே எதிர்பார்த்தது. ஏனெனில் சமாதான உடன்படிக்கை என்ற பெயரில் அது ஓர் Tricky யான புரிந்துணர்வு ஒப்பந்தம். அக்காலப்பகுதியில் பிரபாகரனை தவிர அது வேறு யாருக்கும் இலகுவில் புரிய வாய்ப்பில்லை.

புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததற்கான அடிப்படையானது மேற்குலகு கொண்டிருந்த சமாதானம் மீதான பற்று அல்ல. தவிபு அழிக்கப்படவேண்டுமென்பதற்கான சதிவலை அதுவென்பது பிரபாகரனுக்கு தெரியும். இதுபற்றி நண்பர் சிவராம் என்னோடு உரையாடியபொழுது திகிலூட்டும் சம்பவம் ஒன்றை விவரித்தார். அவர் இறுதியாக பிரபாகரனை சந்தித்தபோது; "இந்தச் சமாதான உடன்படிக்கையினால் நன்மையடையப்போவது தமிழர்களா சிங்களவர்களா.." என அவரிடம் வினவியிருக்கிறார். "இதனால் நன்மையடையப்போவது தமிழர்களோ , சிங்களர்களோ அல்ல; மாறாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் தான் " என்பதே பிரபாகரன் கூறிய அந்தத் திகிலூட்டும் பதில். இதைச் செவிமடுத்த சிவராம் அவர்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. "அப்படியாயின் ஏன் நீங்கள் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒத்துழைத்தீர்கள் ..?" என சிவராம் வினவ; "இதற்கான பதிலை நான் 90 களின் ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன்" என பிரபாகரன் பதிலளித்திருக்கிறார். ஓர் முறை சொன்னதை திரும்பத் திரும்பச் சொல்லவிரும்பாத மனோநிலையின் வெளிப்பாடு இது. ஏனெனில் அவர் சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை எனபதை நீங்கள் அறிவீர்கள். 

இந்தப் பதிலை அவர் கூறியது ஊடகவியலாளர் அனிதா பிரதாப் இடம் என நினைக்கிறேன். தமிழீழம் எப்போது கிடைக்கும் என எண்ணுகிறீர்கள் என பிரபாகரனிடம் அனிதா பிரதாப் கேட்டபொழுது அதற்கு அவர் கூறிய தீர்க்கதரிசனமான பதில் இது. " அதற்கு கால எல்லை கிடையாது; வெளிநாட்டுச் சக்திகளும், உள்நாட்டுச் சக்தியும் ஒரே நேர்கோட்டில் வருகின்ற பொழுதே தமிழீழம் அமையும்" எனபதே அவரது பதில். 

அப்படியானால் வெளிநாட்டுச் சக்திகளும், உள்நாட்டுச் சக்திகளும் இணைந்தே வந்து ஏற்படுத்திய சமாதான உடன்படிக்கையான அந்தச் சந்தர்ப்பத்தை பிரபாகரன் சிதைத்துவிட்டாரா என நீங்கள் எண்ணக்கூடும். அப்படித்தான் இன்றும் பலர் பிரபாகரனைத் தூற்றுகிறார்கள். இவ்வாறு அவரைத் தூற்றுபவர்கள் தொலைநோக்கற்ற, இழிவான சிந்தனையை வெளிப்படுத்தும் நபர்களாக நான் பார்க்கிறேன். 

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபொழுது புலிகளின் கை இராணுவப்பலத்தில் ஓங்கியிருந்தது. அதைச் சிதைப்பதற்காகவும், இராணுவத்தை பலப்படுத்துவதற்காகவுமே புரிந்துணர்வு ஒப்பந்தக் காலம் மேற்குலகால் நன்றாகப் பயன்படுத்தப்பட்டது. இதை பிரபாகரன் 2001 இலேயே தெளிவாக அறிந்திருந்தார். அப்படியானால் ஏன் அவர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் என நீங்கள் சிந்திக்கக்கூடும். அவர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட வேளை ஈராக் மீதான போர் ஆரம்பித்திருந்தது. ஆனால் அவ்வேளையில் யேர்மனி மட்டுமே ஈராக் மீதான அமெரிக்காவின் போரை "வன்முறையின் உச்சம்" என விளித்திருந்தது. சமவேளையில் தமிழீழத்திலும் யேர்மனி அதிகளவான கட்டுமானப்பணிகளுக்கு உதவியவண்ணம் இருந்ததோடு, அரசியற்துறை பிரமுகர்களை வலிந்து யேர்மனிக்கு அழைத்து சந்திப்புகளை மேற்கொண்டது. 

யேர்மனி தமிழீழத்தின் மீதும், புலிகள் மீதும் கொண்டிருந்த புரிந்துணர்வு அமெரிக்காவிற்குச் சினத்தை ஏற்படுத்தியது, பிரித்தானியாவினூடாக அமெரிக்கா கொடுத்த கடுமையான அழுத்தத்திற்குப் பயந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையாகவிருந்த யேர்மனி தவிபுகளைத் தடைசெய்தது. இவ்வாறு ஏற்படுமென்பதும் பிரபாகரனுக்குத் தெரியும். "எல்லா நாடுகளையும் எமக்கெதிராக ஒன்றுகூடவைத்த எமக்குத்தான் இவ்வருடத்தின் நோபல் பரிசு தரவேண்டும்" எனக் கூறியதும் இதனால்தான். 

ஈராக்கிற்கு அடுத்ததான அமெரிக்காவின் குறி ஈரான் அல்லது தமிழீழம் என்பதாக இருந்தது. ரிச்சட் ஆர்மிரேஜ் சொன்னதுபோல தவிபு ஆயுதங்களை புரிந்துணர்வுக்காலத்தில் களைந்திருந்தால், திருகோணமலையில் அமெரிக்கா வேகமாகத் தளம் அமைத்து ஈரான் இன்று நிர்மூலமாக்கப்பட்டிருக்கும். எமது மண்ணில் இடம்கொடுப்பதனால் இன்னொரு மண்ணின் அழிவிற்கு நாம் உடந்தையாகிவிடக் கூடாதென்பதிலும் பிரபாகரன் உறுதியாகவிருந்தார். ஏனெனில் அந்த இழிச்சொல்லைத் தனது எதிர்கால இளந்தலைமுறையின் தலையில் சுமத்திவிடக்கூடாதென்ற அவரது மாபெரும் அர்ப்பணிப்பின் ஓர்துளிகூட பலரால் இன்றுவரை புரிந்துகொள்ளப்படவேயில்லை. 

இரசிய-உக்கிரேனிய அரசுகளிற்கிடையில் உருவாக்கப்பட்ட "மின்ஸ்க்" ஒப்பந்தத்தைச் சிதைத்து போரைத்தூண்டிய இதே நடைமுறையைத்தான் தமிழீழத்திலும் அமெரிக்க அரசு செய்தது. யேர்மனி பொருளாதாரப் பலத்தில் வளார்ந்துவிடக் கூடாதென்பதற்காகவே சிதைக்கப்பட்ட மின்ஸ்க் ஒப்பந்தத்தின் அடிப்படை இன்றுவரை யேர்மனிய அரசியல்வாதிகளுக்கோ மக்களுக்கோ புரியாததைப் போல, தமிழீழம் ஏன் சிதைக்கப்பட்டது என்ற அடிப்படையை இன்றுவரை தமிழர்கள் பலர் அறியவில்லை. 

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் இறுதியில், மகிந்த அல்லது அமெரிக்கா வந்து எம்மை அழிக்கப்போகின்றனர் என்பதை நன்கறிந்த பிரபாகரன், யார் வந்தாலும் "நான் மண்டியிடாமல் நிற்பேன்" என்பதை தனது உரைகளில் பலதடவை தெரிவித்துவிட்டார். அமெரிக்கா சமாதானப் போர்வையில் (ரணில்) வந்து தோற்றபின், மகிந்தவை வைத்து இராணுவப் பலத்தை இறக்கியது. இவ்வேளை வெளிநாட்டிலிருந்த பல தமிழ் அமைப்புகள், பிரபாகரனை மண்டியிடச் செய்வதிலேயே குறியாகவிருந்தன. ஆனால் எவரையும் நம்பி பிரபாகரன் போராடத் தொடங்கவில்லை என்பதால் பிரபாகரன் நந்திக்கடலில் தனது போராட்டத்தை மண்டியிடவைக்காமல் மாபெரும் வெற்றியோடு நிறைவுசெய்தார். இதை உலகநாடுகள் எதிர்பார்த்திருக்கவில்லை, அதைவிடவும் பிரபாகரனை மண்டியிட வைக்க முழுமுயற்சிகளை மேற்கொண்ட "மண்டைகழுவப்பட்ட" மேற்குலக அடிமைத் தமிழ் அமைப்புகளே இதை எதிர்பார்க்கவில்லை. இது மேற்குலகின் முகத்தில் புலிகள் பூசிய வரலாற்று "இராசதந்திரக் கரி". இதை இனி எவராலும் துடைக்கவியலாது. ஏனெனில் மேற்குலகு நிகழ்த்திய மாபெரும் குற்றம். 

சமாதான உடன்படிக்கை என்பது மேற்குலகால் தமிழீழத்தின் இறையாண்மைக்கெதிராக ஆடப்பட்ட படுமோசமான Tricky Game. அதை அவிழ்ப்பதென்பது மிகமிகக் கடினம். ஆனால் அதைச் சளைக்காமல் ஆடி, வெற்றியைத் தனதாக்கிக் கொண்டவர் பிரபாகரன் மட்டுமே. இவ்வாறான Tricky game இல் பல சுதந்திரப்போராட்டங்கள் சிதைத்தழிக்கப்பட்டுள்ளன. உலகிலேயே இந்த மேற்குலக Tricky Game தோற்றுப்போன ஒரே இடம் நந்திக்கடல் மட்டும்தான். இன்று நாதன்தம்பி மற்றும் ஆனந்தராசாவின் வழக்குகள் கூட பிரபாகரனன் வழிவந்த அடையாளங்களே. நாம் இப்போது உயர்நீதிமன்றிலிருந்து யேர்மனிய "அரசியலமைப்புச் சட்ட" நீதிமன்றிற்கு இந்த வழக்கை எடுத்துச்செல்லப்போகிறோம். நாதன்தம்பி தமிழருக்காக மட்டுமல்ல, யேர்மனியின் மீது அமெரிக்கா நிகழ்த்தும் அடக்குமுறைக்கெதிராகவும் எழுந்துநிற்கிறார். அவர்கள் என்ன தீர்ப்புகளை எழுதப்போகிறார்கள் என்பது நமக்குப் பொருட்டேயல்ல. நீ என்ன தீர்ப்பை எழுதினாலும், அடிபணியாமல் நின்றோம் என்ற வரலாறே நமது தேவை. இதுதான் நாம் பிரபாகரனுக்குச் செய்யும் துளியளவு நன்றிக்கடன். அவரது அர்ப்பணிப்பையும் தூரநோக்கையும் அறியாமல், அமெரிக்காவிடம் கதைத்துத் தீர்த்திருக்கலாம், இந்தியாவிடம் கதைத்துத் தீர்த்திருக்கலாம் எனப் புலம்பாதீர்கள். 

தமிழீத்தை வேறொரு நாட்டின் அடிமையாக வாழுமாறு பிரபாகரன் தலைமையின் கீழ்நின்ற தவிபு எழுதிக்கொடுக்கவில்லை. அவர்கள் வழிவந்த நீங்களும் தயவுசெய்து யாரிடமும் அடிமை சாசனத்தை எழுதிக்கொடுத்துவிடாதீர்கள். சிங்கள இராணுவம் வெறும் கைக்கூலிகளே தவிர, புலிகளுடன் மோதியது அமெரிக்காதான் என்பதை நீங்களாகவே ஆய்ந்து தெளியவேண்டும். 

சுவிஸ் நாட்டில் தவிபுகளுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட தடையை ஒரேஒருமாதம் வேலை செய்து நாம் உடைத்தெறிந்ததை பலர் இன்றுவரை அறியவில்லை. அதைப் பொதுமக்கள் அறிவதை இங்குள்ள அமைப்புகளும் விரும்பவில்லை. அதேநிலைதான் இப்பொழுது நாதன்தம்பி மற்றும் ஆனந்தராசாவின் வழக்கிலும் நிகழ்கிறது. இம்மாபெரும் போராட்டத்தை ஏனையநாடுகளிலுள்ள தமிழர்கள் அறிவதை "தமிழ் அமைப்புகள்" விரும்பவில்லை. ஏனெனில் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகாமல் வாழும் "முள்ளந்தண்டற்ற" உயிரினமாக இருக்க விரும்புகிறார்கள். 

நன்றி.