பணய கைதிகளில் பல பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு!
ஹமாஸ் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பணய கைதிகளில் பல பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பணய கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட பல பெண்கள் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த செயற்பாட்டுக்கு எதிராக சர்வதேச சமூகத்தினர் குரல் எழுப்ப வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தில் தலையீடு செய்யுமாறு பெண்கள் உரிமை அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் என்பவற்றுக்கு தாம் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரின் மத்திய பகுதியை தங்களது தரப்பு ஆக்கிரமித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
ஹமாஸ் தரப்பினருக்கு எதிரான தரைவழி தாக்குதல்கள் ஆரம்பித்தமையில் இருந்து இது மிகவும் தீவிரமான நாள் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் இரு தரப்பினருக்கும் இடையிலான போர் மீண்டும் ஆரம்பித்துள்ளமை காசாவில் உணவு நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு திட்டம் குறிப்பிட்டுள்ளது.