கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி.. மன்னிப்பு கேட்டது திருப்பதி தேவஸ்தானம்!

கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி.. மன்னிப்பு கேட்டது திருப்பதி தேவஸ்தானம்!

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 6 பக்தர்கள் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கேட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தில் பற்றுச் சீட்டு மையங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த நிலையில் வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தில்லை என தேவஸ்தான நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறப்பு நாளை நடைபெற உள்ளது. 

இதனை முன்னிட்டு இன்று அதிகாலை இலவச அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

இதற்காக நேற்று காலை முதலே இலவச அனுமதிச் சீட்டுகள் வழங்கும் மையங்களில் பக்தர்கள் குவிந்தனர். 

20 ஆயிரம் அனுமதிச் சீட்டுகள்  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடினர்.

இதனால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு தமிழ்நாட்டின் பொள்ளாச்சி மற்றும் சேலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 6 பக்தர்கள் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஆந்திர முதல் சந்திரபாபு நாயுடு இந்த சம்பவம் குறித்து உடனடியாக உயர்மட்ட அதிகாரிகளிடன் டெலி கான்பிரன்ஸ் மூலம் கூட்டம் நடத்தி கேட்டறிந்தார்.  

மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத தேவஸ்தானம் மற்றும் காவல்துறையையும் கடுமையாக கண்டித்தார் சந்திரபாபு நாயுடு. 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 40-க்கும் மேற்பட்ட பக்தர்களை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்திக்க உள்ளார்.

இந்நிலையில் திருப்பதி அனுமதிச் சீட்டுமையங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கேட்டுள்ளது. 

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ராம்நாராயண் ரூயா அரசு பொது மருத்துவமனைக்குச் சென்ற TTD தலைவர் பிஆர் நாயுடு, காயமடைந்தவர்களைச் சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும் இதுகுறித்து விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவிப்பார் என்றும் தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு கூறினார். 

கூட்ட நெரிசலே இந்த சம்பவத்துக்கு காரணம் என்றும் மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் சில தமிழர்கள் சிலர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே TTD வாரிய உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி இந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கோரியுள்ளார். 

இது தொடர்பாக தேவஸ்தான அறக்கட்டளை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

மேலும் பேசிய பானு பிரகாஷ் ரெட்டி கூறுகையில், "ஏகாதசி தரிசனத்திற்கு டோக்கன் வினியோகிக்க, 91 கவுன்டர்களை திறந்தோம்.. நெரிசல் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது.

அவர்களிடம், TTD வரலாற்றில் இதுபோன்று இதுவரை நடந்ததில்லை.

காலை முதலமைச்சரும், மாநில சுகாதார அமைச்சரும் திருப்பதிக்கு வருவார்கள்" என்றார். 

திருமலை ஸ்ரீவாரி வைகுண்ட துவார அனுமதிச் சீட்டுமையத்திற்கு அருகில் உள்ள விஷ்ணு நிவாசம் அருகே, 'தரிசன' டோக்கன் விநியோகத்தின் போது இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.