திகாமடுல்ல தேர்தல் முடிவு - தேர்தல் ஆணையத்தில் அதாஉல்லா மகஜர்!
கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று (22) தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்திற்கு விஜயம் செய்து நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அடங்கிய மனுவொன்றை உத்தியோகபூர்வமாக கையளித்தார்கள்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள், திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை மீள எண்ணப்பட வேண்டும் என்பதையும் கடந்த தேர்தல் காலத்தில் தேசிய காங்கிரஸ் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களை குறிவைத்து பின்னப்பட்ட பல நகர்வுகளையும் இடையூறுகளையும் உள்ளடக்கிய பல்வேறு விடயங்கள் இம்மனுவில் விஷேடமாக உள்ளடக்கப்பட்டு இருந்தது என்று தெரிவித்தனர்.
மேலும், நியாயத்திற்காக எப்போதும் குரல் கொடுக்கும் தேசிய காங்கிரஸ் இது தொடர்பான விரிவான விளக்கங்களை மிக விரைவில் மக்கள் முன்றில் சமர்ப்பித்து அதன் அரசியல் போராட்டத்தை தொடரும் என்றனர். இந்த விஜயத்தில் தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் டாக்டர் ஏ. உதுமாலெப்பை, பொருளாளர் ஜே.எம். வஸீர், சட்டத்தரணி மர்சூம் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.