அலுவலகத்திற்கு வரவில்லையென்றால் பணிநீக்கம்..!
ஊழியர்கள் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் மூன்று முறை அலுவலகத்திற்கு வர வேண்டும் என அமேசான் வலியுறுத்தியது.
“ரிட்டன் டு ஆஃபீஸ் பாலிசி” அதாவது வொர்க்ஃப்ரம் ஹோம் முறையில் வீட்டிலிருந்து வேலை செய்யும் அலுவலகப் பணியாளர்களை வாரத்திற்கு மூன்று முறை அலுவலகத்திற்கு வருவதை உறுதி செய்யும் இந்த கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டி அமேசான் நிறுவனம் தங்களது விதிமுறைகளில் புதியதொரு மாற்றத்தை செய்துள்ளது.
கிடைத்துள்ள தகவல்களின் படி அமேசான் நிறுவனம் அதனுடைய குளோபல் மேனேஜர்களுக்கான வழிகாட்டுதல்களில் சில முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. அதில் குறிப்பாக வாரத்திற்கு மூன்று முறை அலுவலகத்திற்கு வர மறுக்கும் பணியாளர்களை என்ன செய்வது என்பதை பற்றி வழிகாட்டல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி அமேசானில் பணிபுரியும் பணியாளர்கள் குறைந்தப்பட்சம் வாரத்திற்கு மூன்று நாட்களாவது கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை அவ்வாறு அலுவலகத்திற்கு வர மறுக்கும் பணியாளர்களுக்கு அதிகப்பட்ச தண்டனையாக அந்தந்த மேனேஜர்களே பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் வகையில் வழிகாட்டுதல்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தங்களுடைய பணியாளர்களை அலுவலகத்திற்கு வர வைப்பதில் அமேசான் நிறுவனம் எந்த அளவு தீவிரமாக உள்ளது என்பதை இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
ஆனால் இந்த புதிய கொள்கைகளின்படி மேலாளர்கள் உடனடியாக பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடியாது. அதற்கு மூன்று படிநிலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக அந்தந்த மேலாளர்கள் அலுவலகத்திற்கு வர மறுக்கும் பணியாளர்களிடம் தனியாக உரையாடல்களை மேற்கொண்டு அதனைப் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க வேண்டும். இதற்குப் பின்பும் அந்த பணியாளர் அலுவலகத்திற்கு வர மறுக்கும் பட்சத்தில் இரண்டாவது சந்திப்பை அதன்பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓரிரு வாரங்கள் கழித்து மேலாளர் மேற்கொள்ள வேண்டும்.
இந்த சந்திப்பில் மேலாளர்கள் பணியாளரிடம் அலுவலகத்திற்கு வர வேண்டியதன் முக்கியத்துவத்தை பற்றியும் அவ்வாறு வர மறுக்கும் பட்சத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதையும் கூறி அலுவலகத்திற்கு வருமாறு வலியுறுத்த வேண்டும். இதற்குப் பின்பும் அந்தப் பணியாளர் வாரத்தில் மூன்று முறை அலுவலகத்திற்கு வரவில்லை எனில் மனித வள அதிகாரியிடம் தெரிவித்து, அவர்களின் மூலம் எழுத்து வடிவிலோ அல்லது இமெயில் மூலமாகவும் அந்த பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக அந்த பணியாளர் பணி நீக்கம் செய்யப்படலாம்.
அமேசான் நிறுவன பணியாளர்கள் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் மூன்று முறை அலுவலகத்திற்கு வர வேண்டும் என அமேசான் வலியுறுத்தியது. அதன் பிறகு வெளியூர்களில் வசிக்கும் பணியாளர்களின் வசதிக்காக ஜூலை மாதம் வரை அந்த கால அவகாசத்தை நீடித்தது. அவ்வாறு அலுவலகத்திற்கு வர மறுக்கும் பணியாளர்கள் அவர்களாகவே வேலையை ராஜினாமா செய்வதற்கும் அமேசான் வழிவகை செய்தது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் தனித்தனியாக பணியாளர்களுக்கு வருகை பதிவேடுகளை கொண்டு ஆராய்ந்து அதன் மூலம் தரவுகளை தயாரித்தது. இவ்வாறு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து தங்களது பணியாளர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வைப்பதில் அமேசான் மிகவும் தீவிரம் காட்டி வருகிறது.