இலங்கை வந்தடைந்தார் டொனால்ட் லூ!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இன்று (05) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளார்.
தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக அவர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளார்.
டொனால்ட் லூவுடன், இராஜாங்க திணைக்களத்தின் மற்றுமொரு உயர் அதிகாரியும் தூதுக்குழுவாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
இவர்கள் இன்று அதிகாலை 02.55 மணியளவில் தோஹாவில் இருந்து கட்டார் எயார்வேஸ் விமானமான KR-662 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்க இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு ஒன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தது.
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் சிரேஷ் அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்புகளுக்களிலும் டொனால்ட் லூ கலந்துகொள்ளவுள்ளார்.
இதன்போது அமெரிக்கா மற்றும் இலங்கை கூட்டாக இணைந்து நிலையான பொருளாதார வளர்ச்சி, ஊழல் எதிர்ப்பு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னிலைப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.