பண்டிகைக் காலத்தில் அநாவசிய மின்சார தடை வேண்டாம்!
வார இறுதி நாட்களிலும், பண்டிகை மற்றும் விடுமுறைக் காலங்களிலும் அத்தியாவசியமற்ற பராமரிப்புப் பணிகளுக்காக முன்னதாக திட்டமிடப்பட்ட அனைத்து மின்சாரத் தடைகளையும் இடைநிறுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு சக்திவலுத்துறை அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ x வலைத்தளத்தில் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இதனிடையே, நிலத்துக்கு மேலாக மின்சார பறிமாற்ற வடங்களை அமைப்பதற்குப் பதிலாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் மின்சாரக் கட்டமைப்புக்களை நீருக்கடியில் கேபிள் அமைப்பின் ஊடாக நிறுவுவதற்கு இந்தியாவும் இலங்கையும் உடன்பட்டுள்ளதாக இலங்கையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் பவர் கிரிட் கோர்ப்பரேஷ ஒஃப் இந்தியா லிமிடெட் ஆகிய இரண்டு அமைப்புக்களும் தமது இறுதி அறிக்கையை தயார் செய்துள்ளன.
இந்த அறிக்கை, இரண்டு நாடுகளின் பொறுப்புள்ள அமைச்சகங்களின் செயலாளர்கள் தலைமையிலான தொழில்நுட்ப கூட்டு பணிக்குழுவுக்கு அனுப்பப்படும் என்று இலங்கையின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலத்துக்கு மேலாக மின்சார இணைப்புக்களை பொருத்துவது அதிக செலவு என்பதுடன், கடலில் மின்சாரக் கம்பங்களை அமைப்பதிலும் சிக்கல்கள் உள்ளன.
அத்துடன் கடலில் மின்சாரக் கம்பங்களை நிறுவுவதற்கான தொழில்நுட்பங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்றும் இலங்கையின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.