தென்னிந்திய கலைஞர்களுக்கும் எமது மக்களுக்கும் ஏமாற்றம் - வருத்தமளிக்கிறது : அமைச்சர் டக்ளஸ்!

தென்னிந்திய கலைஞர்களுக்கும் எமது மக்களுக்கும் ஏமாற்றம் - வருத்தமளிக்கிறது : அமைச்சர் டக்ளஸ்!

தென்னிந்தியப் பாடகர் ஹரிஹரன் தலைமையில் இசைக்கலைஞர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறான சம்பவங்கள் எமது மக்களை தொடர்ந்தும் துன்பத்தில் ஆழ்த்தி குளிர்காய விரும்பும் சுயநலத் தரப்புக்களுக்கு வாய்ப்பாக மாறிவிடும் என வருத்தம்  தெரிவித்துள்ளார். 

யாழ். முற்றவெளியில் நேற்று (09) இடம்பெற்ற தென்னிந்திய திரைப்  பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

"இவ்வாறான சம்பவங்கள் எமது பிரதேசங்களில் இடம்பெறுவது வேதனையளிக்கின்றது. 

எமது மக்களின் வாழ்வாதாரத்தினையும் வாழ்வியலையும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவதற்கு எமது புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்ற வேளையில், புலம்பெயர் முதலீட்டாளர் ஒருவரின் முன்முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில், இவ்வாறான அசௌகரியங்கள் ஏற்படுவது, மக்கள் நலன் சார்ந்த எமது எதிர்பார்ப்புக்களுக்கு பின்னடைவுகளையே ஏற்படுத்தும்.

எமது மக்களை தொடர்ந்தும் அவலங்களுக்குள் மூழ்க வைத்திருந்து, அதன்மூலம் அரசியல் இலாபமீட்ட முனைகின்ற சுயலாப தரப்புக்கள், எமது பிரதேசங்களில் முதலீடுகளுக்கு உத்தரவாதம் இல்லை என்ற கருத்தினை பரப்புவதில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டு வருகின்றனர். 

அவ்வாறானவர்களின்  கருத்துக்களை வலுப்படுத்துவதாக இவ்வாறான சம்பவங்கள் அமைந்து விடக்கூடாது.

கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பார்க்கின்ற போது, ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பிற்கும் அதிகமான மக்கள் வருகை தந்தமையும், ஒழுங்குபடுத்தலில் இருந்த குறைபாடுகள் சிலவுமே இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்தச் சம்பவமானது, இசை நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த எமது மக்களுக்கும், ஆர்வத்துடன் வருகைதந்த தென்னிந்திய கலைஞர்களுக்கும் அதேபோல் ஏற்பாட்டாளர்களுக்கும் ஏமாற்றத்தினை அளித்திருக்கின்றது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது வருத்தத்தினை தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்ற போது, தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி செய்வதை ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்." என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.