தமிழரின் இணைப்பாட்சி கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும்!
இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டல் நிகழ்வும் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றன.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் க.லவகுசராசா தலைமையில் வடக்கு கிழக்கிலிருந்து வருகை தந்த பெருமளவிலான மக்களின் பங்கேற்புடன் நல்லூர் கிட்டு பூங்காவில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கடந்த 2022 ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வட-கிழக்கு மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு வேண்டிய 100 நாள் செயல் முனைவின் இறுதி நாளான 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 08ம் திகதி தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வாக “ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு” வேண்டும் எனும் மக்கள் பிரகடனம் வெளியிடப்பட்டிருந்தது.
இப்பிரகடனம் வெளியிடப்பட்டு ஓராண்டு பூர்த்தி நாளான இன்று வடக்கு கிழக்கு மக்கள் ஒன்றியம் “இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம்” எனும் கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டல் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பல்கலைக் கழக மாணவர்கள், தொழில் சங்கப் பிரதிநிதிகள், மனித உரிமை பாதுகாவலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.