காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் வழமைக்கு!

மூளைக் காய்ச்சல் காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்ததையடுத்து தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் வழமைக்கு!

காய்ச்சல் அறிகுறிகளை கொண்டிருந்த அனைத்து கைதிகளும் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சையின் பின்னர் தற்போது மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சல் காரணமாக கடந்த 3ஆம் திகதி உயிரிழந்ததையடுத்து கடந்த 7ஆம் திகதி முதல் குறித்த சிறைச்சாலையின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

காய்ச்சல் அறிகுறிகளை வெளிப்படுத்திய மேலும் 8 கைதிகள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் மாத்திரமே தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி சிறைச்சாலையின் நிலைமை காரணமாக, நீதிமன்ற நடவடிக்கைகள் நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் மூலம் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டதுடன் பார்வையாளர்களின் வருகையும் மட்டுப்படுத்தப்பட்டது.

அத்துடன், புதிதாக வரும் கைதிகள் அனைவரும் அகுனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் தற்போது நிலைமை சீரடைந்துள்ளமையினால் கைதிகளை மீண்டும் காலி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதற்கு அனுமதித்துள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.