இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் இறுக்குமாறு IMF அழுத்தம்!

நாட்டை கட்டியெழுப்புவதற்கு மேலும் இறுக்கமான பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவது அவசியம் என சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் இறுக்குமாறு IMF அழுத்தம்!

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடிய நாட்டுக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இதனை குறிப்பிட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு, வர்த்தகப் பிரதிநிதிகள், சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.

இந்த சந்திப்பில் வட மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி குறித்து மாகாண ஆளுநர், சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், நாட்டில் ஊழல் ஒழிப்பு சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்.

அதேநேரம், புதிய வரிக்கொள்கை பாரிய சுமையாக அமைந்துள்ளதென வர்த்தகப் பிரதிநிதிகளும், சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் பிரதிநிதிகளும் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்

இந்தநிலையில், வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மக்கள் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதை தாம் அறிந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழு பிரதான பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

கடந்தகால பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே நாடு தற்போதைய நிலையை அடைந்துள்ளதாகவும், நிலைமையை மாற்றியமைக்க குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இறுக்கமான கொள்கைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் குறிப்பிட்ட அவர் கடந்த காலங்களில் இலங்கை பல சிறந்த முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.