அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஜனவரியில் ஆரம்பம்!
அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தி இலங்கையை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பண்டைய முறைகளில் செயற்படுவதன் ஊடாக நாட்டிற்கு எதிர்காலம் கிடையாது. கடந்த சில வருடங்களில் ஒரு தேசம் என்ற வகையில் நாம் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை எதிர்கால சந்ததியினர் வரை கொண்டு செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எனவே, புதிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழிகள் இல்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
18 மாதங்களில் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியான முறையில் நிர்வகிக்காவிட்டால் மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும்.
தற்போது நிலையான பொருளாதாரத்தை டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு கொண்டு செல்ல புதிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்
அதில் நவீன பொருளாதார முறைமைகளை பயன்படுத்த வேண்டும்.
இந்த மாத நடுப்பகுதியில், நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவிக்கவுள்ளது.
ஆனால், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த புதிய பொருளாதார முறைகளின்படி முன்னேற வேண்டும்.
அவ்வாறில்லாமல், பழைய பொருளாதார முறைகளை அமுல்படுத்தினால், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.