வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்ய விரைவில் அனுமதி!
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்புடன், தேவைக்கேற்ப வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என குறிப்பிட்டார்.
"இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தியுள்ளோம்.
1,500 முதல் 2,000 இறக்குமதிகள் நிறுத்தப்பட்டன.
இப்போது படிப்படியாக அவற்றை தளர்த்தி இப்போது வாகன இறக்குமதியை மட்டும் நிறுத்தியுள்ளோம்.
தேவைக்கு ஏற்ப திறக்கிறோம். சுற்றுலாத் துறைக்கு தேவையான 750 வேன்கள் மற்றும் 250 பஸ்கள் இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளோம்.
மிகவும் நுணுக்கமாக தேடிப்பார்த்து ஆராய்ந்த பின்னரே நாம் முடிவுகளை எடுக்கிறோம்.
சுற்றுலாத்துறை வளர்ச்சியடைகிறது. ரூபாயின் பெறுமதி அதிகரிக்கிறது.
இதனால், எதிர்காலத்தில் அத்தியாவசியமான வாகனங்கள் எவை, தவிர்க்க முடியாத தேவையுடைய வாகனங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் அதற்கு வாகனங்களை இறக்குமதி செய்ய இடம் கொடுப்போம்".