ஹரக் கட்டாவை மீட்பதற்கு திட்டமிட்டதாக கூறப்படும் துப்பாக்கிதாரி கைது!
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தகவை மீட்பதற்காக திட்டமிட்டதாக கூறப்படும் துப்பாக்கிதாரியை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
இவர் முன்னாள் இராணுவ சிப்பாய் எனவும் அவர் தற்போது தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரக் கட்டாவை மீட்பதற்காக கொமாண்டோ பாணியில் பயங்கரவாத தாக்குதலை நடத்தும் திட்டம் குறித்த விபரம் கடந்த ஒக்டோபர் 24 ஆம் திகதி முதலில் வெளியானது.
பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்ட இரண்டு முன்னாள் கொமாண்டோ சிப்பாய்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னதாக கைது செய்துள்ளனர்.
கொமாண்டோ சீருடையுடன் குழுவொன்று, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குள் நுழைந்து பிரதான நுழைவாயில் ஊடாக பாதுகாப்புப் படையினர் அனைவரையும் தாக்கிவிட்டு தப்பிச் செல்வதற்கு திட்டமிட்டிருந்தது.
இந்தத் திட்டம் வெளியானதையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாதுகாப்புக்காக காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பிரதான சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ள இரண்டு முன்னாள் கொமாண்டோ படையினர் இந்த ஒப்பந்தத்திற்காக 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.