தோனியுடன் 10 வருடங்களாக பேசாத ஹர்பஜன்!
தானும் எம்.எஸ் தோனியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை என்பதை இந்திய அணியின் முன்னாள் முன்னணி சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக இரண்டு வீரர்களுக்கும் இடையில் முறுகல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும் இது வதந்தி என்றே கூறப்பட்டு வந்தது.
இந்தநிலையில் முதல் தடவையாக, இது உண்மையென்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றின் போது தகவல்களை வெளியிட்ட ஹர்பஜன் சிங், உண்மையில், தோனியுடன் சரியாக அரட்டை அடித்து சுமார் 10 வருடங்கள் ஆகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு முதல் 2020 வரை இந்தியன் பிரீமியர் லீக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இருவரும் விளையாடிய போதும், அணி வீரர்களாக, விளையாட்டைப் பற்றிய களத்துக்கு மட்டுமே தமது பேச்சுக்களை மட்டுப்படுத்தி கொண்டதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை, தோனி தன்னிடம் பேசாமல் இருப்பதற்கு காரணம் இருக்கலாம். எனினும் தம்மை பொறுத்தவரை காரணம் எதுவும் இல்லையென்று ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தோனியிடம் இரண்டு முறை பேச முயற்சித்த போதும், எந்த பதிலும் வரவில்லை. எனவே மீண்டும் அவருடன் பேச முயற்சிப்பதை தவிர்த்து கொண்டதாகவும் ஹர்பஜன் கூறியுள்ளார்.
இந்தநிலையில், தாம் ஒருவரை மதித்தால், அவர் தம்மை மதிக்க வேண்டும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாகவும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.