புதிய காற்று சுழற்சியும் தாழமுக்கமும் : கிறிஸ்மஸ் வரையான காலநிலை நிலவரம்!
கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டது போல், தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சி உருவாகி உள்ளது.
இதனை நேற்றைய தினம் இந்திய வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்தி உள்ளது.
இது ஒரு மெலிந்த காற்று சுழற்சியாகவே தற்போது உருவாகி வருகின்றது.
இதன் காரணமாக எதிர்வரும் 10ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை ஓரளவு இடையே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை அடுத்த ஒரு நிகழ்வும், எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மீண்டும் ஒரு நிகழ்வும், இவ்வாறு நான்கு நிகழ்வுகள் இவ்வருடம் முடிவதற்குள் இலங்கைத் தீவின் கடற்பிராந்தியத்தை நோக்கி நகர இருக்கின்றது.
இதில் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை ஓரளவு சற்று பலமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புவியியல் விசேட நிபுணர் பேராசிரியர் அக்ஷயன், கூறியது போல் MJO அலைவும் (MJO - Madden-Julian Oscillation) இதில் செல்வாக்கு செலுத்துகின்றது.
இதற்கு முன்னர் நிகழ்ந்த நகர்விலும், தற்போது நடைபெறுகின்ற நிகழ்விலும் இது செல்வாக்கு செலுத்துகின்றது.
அவர் கூறியது போல் இதனைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
காரணம் ஓரளவு புவியியல் துறையில் அறிவுள்ளவர்களை தவிர மீனவர் சமூகமோ, விவசாயிகளோ அல்லது சாதாரண பொது மக்களுக்கோ இது விளங்கக் கூடியதாக இருக்காது என்பதனால் இதனை தவிர்த்து இருப்பதாக ஓய்வு நிலை வானிலை ஆய்வாளர் சூரியகுமார் தெரிவித்துள்ளார்.