24 மணிநேரமும் காவல்துறை அதிகாரிகளை பணியில் அமர்த்துமாறு பதில் காவல்துறைமா அதிபர் உத்தரவு!
பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42,248 சந்தேக நபர்களின் விரிவான பட்டியலை அனைத்து காவல்துறை நிலையங்களின் குற்றப் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் 35,505 திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட 4,258 சந்தேகநபர்களும் 2, 485 பேரும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் நடந்த பெருங்குற்றங்களுக்காக தேடப்பட்டு வருபவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று முதல், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையில் அனைத்து காவல்நிலையங்களின் பிரிவுகளுக்கான பொறுப்பதிகாரிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், தலைமையக பரிசோதகர்கள் மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகளை தீவிரமாக பங்கேற்குமாறு பதில் காவல்துறை மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் தேடப்படும் சந்தேகநபர்களை அடுத்த மாதத்துக்குள் கைதுசெய்யும் நோக்கில் 24 மணிநேரமும் காவல்துறை அதிகாரிகளை பணியில் அமர்த்துமாறு அனைத்து குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகளுக்கு, பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.