தமிழர்களுக்கு சர்வதேசத்தின் தலையீட்டில் மாத்திரமே தீர்வுக்கிடைக்கும் - கஜேந்திரகுமார் வலியுறுத்தல்!

தமிழர்களுக்கு சர்வதேசத்தின் தலையீட்டில் மாத்திரமே தீர்வுக்கிடைக்கும் என்பதை மருதங்ககேணி சம்பவமும் அதற்கு பின்னர் இடம்பெற்ற சம்பவங்களும் உணர்த்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு சர்வதேசத்தின் தலையீட்டில் மாத்திரமே தீர்வுக்கிடைக்கும் - கஜேந்திரகுமார் வலியுறுத்தல்!

தமிழர்களுக்கு சர்வதேசத்தின் தலையீட்டில் மாத்திரமே தீர்வுக்கிடைக்கும் என்பதை மருதங்ககேணி சம்பவமும் அதற்கு பின்னர் இடம்பெற்ற சம்பவங்களும் உணர்த்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
 
கிளிநொச்சி நீதிமன்றால் பிணையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ் தரப்புக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இன்று காலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாலை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, அவரை சரீர பிணையில் செல்வதற்கு நீதவான் அனுமதியளித்தார்

இன்று காலை மருதங்கேணி காவல்துறையினரால் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டார்.

காலை 6.30 அளவில், கஜேந்திரகுமாரைக் கைது செய்வதற்காக, மருதங்கேணி காவல்துறையினர் அவரது இல்லத்திற்கு சென்றனர்.

இதன்போது குறித்த விடயம் தொடர்பில், சபாநாயகருக்கு அறிவித்ததாகவும், அது தொடர்பில், காவல்துறைமா அதிபருக்கு தாம் அறிவிப்பதாக சபாநாயகர் தம்மிடம் தெரிவித்ததாகவும் கஜேந்திரகுமார் ஊடகங்களிடம் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், நாளை முற்பகல் 10 மணிக்கு, மருதங்கேணி காவல்துறையில் முன்னிலையாகுமாறு, நேற்றைய தினம் தமக்கு அறிவிக்கப்பட்டிருந்ததைதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில், இன்றைய தினம், நாடாளுமன்றில், சிறப்புரிமை பிரச்சினையை முன்வைக்க தாம் திட்டமிட்டிருந்ததாகவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அவர் இன்று காலை 8.15 அளவில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவர், காவல்துறை வாகனத்தில், சட்டத்தரணி சகிதம் மருதங்கேணி காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.

மருதங்கேணிக்கு அழைத்து செல்வதாக கூறப்பட்ட போதும், கஜேந்திரகுமார், கிளிநொச்சி காவல்துறைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு வாக்குமூலம் பெறப்பட்டது. 

இந்தநிலையில் அவர் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதேவேளை கஜேந்திரகுமாரின் கட்சி ஆதரவாளர்கள் கிளிநொச்சி காவல்துறை நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.