புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிப்பு!
10வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை நாடாளுமன்றம் கூடிய நிலையில், புதிய சபாநாயகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய சபாநாயகர் பதவிக்கான பிரேரணை பிரதமர் ஹரினி அமரசூரியவினால் கொண்டுவரப்பட்டதுடன், சபைத்தலைவர் பிமல் ரத்நாயக்கவினால் அதனை வழிமொழிந்தார்.
முன்னதாக 10வது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக ரங்வாலா பதவி விலகியதை அடுத்து, சபாநாயகர் பதவி வெற்றிடம் ஏற்பட்டது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகர் ஒருவரை பரிந்துரைப்பதாக அறிவித்திருந்தது. எனினும், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் ஒருவரின் பெயரை முன்மொழியாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதனிடையே, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் சிலர் இன்று பதவி பிரமாணம் செய்துகொண்டனர்.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சுஜீவ சேனசிங்க, மொஹமட் நிசாம் காரியப்பர், முஹம்மது இஸ்மாயில் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பைசர் முஸ்தபாவும் இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.