ஜனாதிபதி பதவியை தக்கவைக்க மதுபானசாலை அனுமதியா? 2048இல் இலங்கையின் நிலை?
இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்புடன் மதுபானசாலை (Bar Licenses) அனுமதி வழங்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இலங்கையில் 478 புதிய மதுபான நிலையங்களை அனுமதிக்கும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை முடிவின் தொடர்ச்சியாக இவை வழங்கப்பட்டுள்ளதாக முக்கிய அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 200 அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் 300 இற்கு மேற்பட்ட அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
'அரகலய' போராட்டத்தின் போது போராட்டக்காரர்களால் வீடுகள் எரிக்கப்பட்ட சகல ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல் எதிர்க்கட்சியை சேர்ந்த 22-29 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மதுபானசாலை (Bar Licenses) அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இதில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கிய கட்சித் தாவிய கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாருக்கு மட்டும் மூன்று மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் திகன, கண்டி, மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் வழங்கப்பட்டுள்ளன.
இதில் இரண்டு அனுமதி பத்திரங்களை அவர் குறைந்தது தலா 20 மில்லியன் ரூபாய்க்கு கண்டியின் பிரபல வர்த்தகர்களுக்கு விற்று இருப்பதாகவும் கூறப்படுக்கின்றது.
இது தவிர அங்கஜன் இராமநாதன், பிரசன்ன ரணதுங்க, திலும் அமுனுகம மற்றும் லொஹான் ரத்வத்த உள்ளிட்டவர்களுக்கு மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்ட விபரங்களை தயாசிறி ஜெயசேகர அம்பலப்படுத்தியுள்ளார்.
அதே போல டக்ளஸ் தேவானந்தா தனது தம்பி தயானந்தா பெயரிலும் பிள்ளையான் தனது சகோதரியின் கணவர் பேரிலும் மதுபானசாலை அனுமதி பத்திரங்களை பெற்று இருப்பதாக கூறப்படுகின்ற போதும் உறுதியான தகவல்கள் வௌியாகவில்லை.
அதே போல பிள்ளையான் தன் சகாவான தேவராஜன் என்பவர் பெயரிலும் பல விதமான மதுபானசாலை அனுமதி பத்திரங்ளை பெற்று இருப்பதாக சொல்லப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து மதுபானசாலை அனுமதி பத்திரங்களை பெற்று இருப்பதாக சொல்லப்படுகின்றது.
ஆனால் அவர்களின் விபரங்களையும் உறுதிப்படுத்த முடியவில்லை.
இலங்கையில் 90% மதுபான நிலையங்களின் உடமையாளர்களாக அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள்.
ஆளும் கட்சி அரசியல்வாதிகள் மதுபானசாலை அனுமதி பத்திரங்களை பெற்று பினாமிகள் பெயரில் நடத்துவதும் மதுபானசாலை அனுமதி பத்திரங்களை 50 பில்லியன் வரை விற்பதும் பல காலமாக நடைமுறையாகவே உள்ளது.
அதேபோன்று ஏறக்குறைய 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதுபான வியாபாரத்துடன் நேரில் தொடர்புபட்டு இருக்கின்றார்கள் என்பதை சில வருடங்களுக்கு முன்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் இராமநாயக்க அம்பலப்படுத்தி இருந்தார்.
இந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இன்றைக்கு 75 வயது மனிதர் ஒருவர் தனது பதவி ஆசைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை பேசி லஞ்சமாக அவர்களுக்கு மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் வழங்கி வருகின்றார் என அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2048 ஆம் ஆண்டு இலங்கைத் தீவு அபிவிருத்தி அடையும் வாய்ப்புகள் பிரகாசமாகி வருகின்றன.