தேசிய கீதம் நிர்வாணமாக பாடப்பட்டாலும் ஆச்சரியமில்லை - உமாராவுக்கு எதிராக புலனாய்வு பாய்ச்சல்! (Virul Video)

எதிர்காலத்தில் இலங்கையின் தேசிய கீதம் நிர்வாணமாக பாடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.  ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் தேசிய கீதம் பாடப்பட்ட விதம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகி உமாரா சின்ஹவன்சா என்பவர் தேசிய கீதம் பாடுவதற்கு ஒரு புதிய முறையை சேர்த்துள்ள நிலையில் சமூக ஊடகங்களில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தேசிய கீதத்தை ராப் அல்லது ரீமிக்ஸ் செய்ய முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய கீதத்தை பாடுவதற்கு ஒரு நிலையான முறை இருப்பதாகவும், இந்த போக்குகள் அனுமதிக்கப்படுமானால், எதிர்காலத்தில் தேசிய கீதம் நிர்வாணமாக அவரவர் நினைத்தபடி  தன்னிச்சையான பாணியில் பாடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

எந்தவொரு நாட்டிற்கும் தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் என்பது தனித்துவமானது.  சினிமா பாடல்கள் மற்றும் தனி நபரின் ராப் பாடல்களை இன்னொருவர் பிரதிபலிப்பது மற்றும் திரிபுபடுத்தி பாடுவது போன்று தேசிய கீதத்தை பாட முடியாது என்று தமிழ்விஷன் கருதுகிறது.

இந்த நாட்டின் பிறந்தவர் எவராக இருந்தாலும் தாய்க்கு அடுத்து தாய்நாட்டுக்கு மரியாதை செலுத்த வேண்டும். இனம், மதம், மொழி என நாங்கள் வேறுபட்டிருந்தாலும் உலகில் எந்தபாகத்திற்கு சென்றாலும் எங்களின் அடையாளம் இந்த தாய் மண்தான். 

வாழ்வதற்காக புலம்பெயர்ந்தாலும், நாட்டின் இன்னொரு தரப்பினரின் கெடுபிடியால் வெளியேறிச் சென்றாலும் இந்த தாய் மண்தான் எங்களை தாலாட்டி, சீராட்டி, இலவச கல்வியை ஊட்டி, சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்து வளர்த்தெடுத்தது.

பிற நாடுகள் இனம், மதம், மொழிகலால் வேறு பட்டு கிடந்தாலும் தேசிய கொடிக்கும், தேசிய கீதத்திற்கும் தங்களின் உயிருக்கும் மேலான மதிப்பை அளிக்கின்றன.

கிரிக்கட் போட்டி என்றாலும், அதற்காக தேசிய கீதத்தை கேலிக் கூத்தாக்க அனுமதி முடியாது என்பது தமிழ்விஷனின் எண்ணம்.

சர்வதேச போட்டிகளில் கூட தேசிய கீதங்கள் நேர்த்தியாக ஒலிப்பதிவுகளின் ஊடாக இசைக்கப்பட்டு ஆரம்பிக்கப்படுகின்றன.

உள்ளூர் போட்டியொன்றில் இவ்வாறு தேசிய கீதம் அவமானப்படுவது வருந்தத்தக்கது.  இந்த நிலைமை எதிர்கால சந்ததியை மாற்று சிந்தனைக்கு உட்படுத்தும்.  

இன்று எந்தவொரு விடயத்தையும் இலகுவாக கற்றுக்கொள்ளும் சிறார்கள், இவ்வாறு அலங்கோலமாக பாடப்படும் கீதத்தை பின்பற்ற வாய்ப்புள்ளது.

விளையாட்டாக வேணும் அவர் அதனை பாட முயற்சிக்கலாம்..   எவ்வாறாயினும், சிங்களவர்கள் மத்தியில் மாத்திரம் அறிமுகமாகியிருந்த உமாரியா  தற்போது தேசிய கீதத்தை சீர்குழைத்து உலகளவில் கேவலப்பட்டுவிட்டார்.

பிரபல பாடகி உமாரா சின்ஹவன்ச, ஞாயிற்றுக்கிழமை (30)  நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக் ஆரம்ப விழாவில் தேசிய கீதத்தைப் பாடும் போது ஒரு முக்கியமான வரியை தவறாக உச்சரித்த காணொளி சமூக ஊடகங்களில் விவாதப்பொருளானது.

குறித்த காணொளியில், அவர் 'நமோ நமோ மாதா' என்பதற்குப் பதிலாக 'நமோ நமோ மாஹதா' என்று மீண்டும் மீண்டும் பாடுவது பதிவாகியுள்ளது. 

இதனால் இணையத்தில் சர்ச்சைக்குள்ளானது. இதன் விளைவாக அனைத்து சமூக ஊடக தளங்களிலும் "மஹதா"  #Mahatha #මහතා என்ற ஹேஷ்டேக் தற்போதைய டிரெண்டிங்கில் உள்ளது.

இந்த சூழ்நிலையில், எல்.பி.எல் தொடரின் தொடக்க விழாவில் தேசிய கீதம் திரிபு படுத்தப்பட்டு பாடப்பட்டமை  தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திணைக்களத்திற்கு ஏற்கனவே பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, தற்போதுள்ள சட்டத்தின் கீழ் இந்த சம்பவத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அதிகாரிகள் குறிப்பாக ஆய்வு செய்து வருவதாகவும், பொலிஸ் மா அதிபருடன் இன்று (2) கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரதமர் தினேஷ் குணவர்தனவின் ஆலோசனையின் பேரில், தேசிய கீதத்தை சிதைத்து பாடியமை தொடர்பில் அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் .கே.டி.என்.ரஞ்சித் அசோகவும் நேற்று (31) விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த விசாரணை அறிக்கை விரைவில் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதேவேளை, தேசிய கீதத்தை திரிபுபடுத்தும் வகையில் பாடுவது அல்லது மாற்றுவது சட்டத்திற்கு முரணானது எனவும் அவ்வாறு செய்வோர் மீது தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்.விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

Files