மாமனிதராக நாராயணசாமி சந்திரசேகரன் அவர்கள் மதிப்பளிக்கப்பட்டார்
தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும் ஆழமாக நேசித்த ஒரு நல்ல மனிதரை இன்று தமிழர் தேசம் இழந்துவிட்டது. தமிழ் மண்ணினதும் தமிழ் மக்களினதும் விடிவிற்காக ஓயாது உழைத்த தமிழினப்பற்றாளர் ஓய்ந்துவிட்டார். இது தமிழர் விடுதலை வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் துயர நிகழ்வு.
திரு.நாராயணசாமி சந்திரசேகரன் அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர் அசாத்தியமான குணவியல்புகளை கொண்டவர். இனிமையான பேச்சும்,எளிமையான பண்பும்,பெருந்தன்மையான போக்குமே அவரது ஆளுமையின் சிறப்பியல்புகள். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான மனிதர். தமிழீழ மக்களால் பெரிதும் போற்றப்பட்ட தலை சிறந்த சட்ட நிபுணர். நிறைந்த அறிவு படைத்தவர். சட்டத் துறையில் விற்பன்னர். உலக அரங்கில் பிரபலமான சட்ட நிபுணர். இவருக்கு அறிமுகமே தேவையில்லை.இவரது சாவு தமிழர் தேசத்திற்கு என்றுமே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்குள் தமிழீழ மக்களது வாழ்வு சிக்குண்டு சிதைந்து போவதை அவர் அறவே வெறுத்தார். இந்த அடக்குமுறைக்குள் இருந்து தமிழீழ மக்கள் முற்றாக விடுபட்டு, விடுதலைபெற்று சுதந்திரமாகவும் கௌரவமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதையே வாழ்வின் இலட்சியமாக வரித்துக்கொண்டவர். இந்த இலட்சியத்தால் உந்தப்பெற்று தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு என்றும் உறுதுணையாக நின்றவர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் இலட்சியத்தையும் முழுமையாக முழுமனதுடன் ஏற்று தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தார். பல்வேறு அச்சுறுத்தல்களையும் ஆபத்துக்களையும் மிகுந்த துணிவுடன் எதிர் கொண்டவர்.
அன்னார் ஆற்றிய அரும்பணிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. என்றுமே பாராட்டுக்குரியவை.
திரு.நாராயணசாமி சந்திரசேகரன் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து அவரது நற்பணியை கௌரவிக்கும் முகமாக ‘மாமனிதர்’என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் பெருமையடைகின்றோம்.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது அன்பான ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.