வவுனியா இரட்டை கொலை விவகாரம் - நீதிமன்றில் சி.ஐ.டி முன்வைத்த தகவல்!
வவுனியா - தோணிக்கலில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரிடம் இருந்து தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது.

இது குறித்த விசாரணைகள் வவுனியா நீதிவான் நீதிமன்றில் இன்று (24) விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கடந்த மாதம் பிறந்த நாள் நிகழ்வு இடம்பெற்ற வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர் அங்கு வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதுடன் வீட்டுக்கு தீ வைத்தனர்.
இதில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் காயமடைந்தனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய பிரதான சந்தேகநபர் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வவுனியா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது பிரதான சந்தேகநபரிடம் இருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த தொலைபேசி ஊடாக மூவாயிரத்து 292 வெளிச் செல்லும் அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் பெண் ஒருவருக்கு 35 தடவைகள் அழைப்பு மேற்கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் குறித்த தொலைப்பேசி உள்ளிட்ட மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.