சேவைக்கு இடையூறு விளைவிக்கும் ஊழியர்களுக்கு தண்டனை!

சேவைக்கு இடையூறு விளைவிக்கும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சேவைக்கு இடையூறு விளைவிக்கும் ஊழியர்களுக்கு தண்டனை!

அவரது பிரத்தியேக எக்ஸ் சமூக ஊடக தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

 சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது இலங்கை மின்சார சபை நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறிச் செயல்படும் எந்தவொரு ஊழியரையும் இடைநிறுத்தம் செய்யவும், அவர்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அமைச்சரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் தனியார் மயமாக்கலுக்கு எதிராக இன்று முதல் 03 நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மின்சார சபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ள நிலையில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த பணிப்புரை விடுத்துள்ளார். 

அத்துடன், இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பான அறிவிப்பையடுத்து, இலங்கை மின்சார சபை நிர்வாகம், மறு அறிவித்தல் வரை தமது அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் ரத்து செய்துள்ளது. 

இந்த முடிவுகளை அறிவிக்கும் வகையில், நேற்று இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. 

இதன்படி, மின்சார சபையின் பணியாளர்கள் தங்களது உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் மாத்திரமே விடுமுறை பெறமுடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இலங்கை மின்சார சபையின் உத்தேச சீர்திருத்தங்கள் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

மின்சாரக் கட்டணக் குறைப்புப் பிரேரணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அடுத்த வாரம் இலங்கை மின்சார சபை சமர்ப்பிக்கும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.