அஞ்சலிக்காக மலர்ச்சாலையிலும், நாடாளுமன்றத்திலும் சம்பந்தனின் உடலம் - அரச தலைவர்கள் இரங்கல்!

அஞ்சலிக்காக மலர்ச்சாலையிலும், நாடாளுமன்றத்திலும் சம்பந்தனின் உடலம் - அரச தலைவர்கள் இரங்கல்!

நீண்ட காலமாக தமிழ் மக்களுக்கு இணையில்லாத தலைவராக மக்களை வழிகாட்டியவரது இழப்பு தமிழ் சமூகத்திற்கு மட்டுமன்றி முழு இலங்கைக்குமான மூத்த அரசியல்வாதியின் இழப்பாக கருதப்படுவதாக உலக அரசியல் தலைவர்கள் அமரர் இரா சம்பந்தனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அன்னாரின் உடல் கொழும்பில் மலர்ச்சாலையில் நாளை காலை 9 மணியிலிருந்து மக்களது அஞ்சலிக்காக வைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் நாளை மறுநாள் முழுவதும் (03) நாடாளுமன்றத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தனின் உடல் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும்.

மேலும் இறுதிக்கிரியைகள் குறித்து குடும்பத்தார் தகவல் வெளியிடவில்லை எனினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் காலமானதையடுத்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சண்முகம் குகதாசன் நிரப்பவுள்ளார்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சண்முகம் குகதாசன் 16,770 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 இந்தநிலையில், உள்நாட்டு மற்றும் உலக அரசியல் பிரமுகர்கள் அன்னாரது மறைவுக்கு தமது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

மறைந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் அஞ்சலி நிகழ்வுகள் கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (30.06.2024) இரவு 11 மணியளவில் கொழும்பில் காலமானார்.

அதனையடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமான நிகழ்வுகள் இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் நடைபெற்றுள்ளன.

அதேவேளை, துயரின் வெளிப்பாடாக மாவட்டப் பணிமனை முன்றலில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. 

சம்பந்தனின் இழப்பு இது ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமது எக்ஸ் தளத்திலே இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைக்கு சேவையாற்றிய சம்பந்தனின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம்.

அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும்.

அவருடைய நேர்மையான மற்றும் நியாயமான தலைமை எனக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்” எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (30) இரவு உயிரிழந்த மூத்த அரசியல்வாதியான இரா. சம்பந்தனின் மறைவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) இரங்கல் தெரிவித்துள்ளார். 

தனது எக்ஸ் (X) பக்கத்தில் தனது இரங்கலை அவர் வெளியிட்டுள்ளார். 

குறித்த பதிவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைகிறேன்.

அவரது கொள்கைகளுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச்சென்றுள்ளது.

மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் (R. Sampanthan) மறைவிற்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P.S.M. Charles) தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியில் அவர், 

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும்,  இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவரும், சிரேஷ்ட அரசியல்வாதியும், சட்டத்தரணியுமாகிய இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவுச் செய்தி அறிந்து கவலை அடைகின்றேன்" என கூறியுள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர் சம்பந்தனின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு அழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இரா.சம்பந்தனின் மறைவிற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியும் தனது இரங்கலினை தெரிவித்துள்ளார். 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும், கடந்த அரை நூற்றாண்டாகத் திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநித்துவப்படுத்தி செயற்பட்டவரும், இலங்கைத் தமிழர் இனச் சிக்கலுக்கு தீர்வுக்கான அயராது உழைத்து வந்தவருமான மாண்புமிகு இரா சம்பந்தன் ஐயா இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்தகவலையும் அடைகின்றோம் என  இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் க.ச.குகதாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைத் தமிழர் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 

இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனின்  மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஷா, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உள்ளிட்டோரும் தமது இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

ஒரு பழைய நண்பராகவும் சக அரசியல் பிரமுகராகவும் இருந்ததோடு பல நாட்கள் பல்வேறு விடயங்களை கலந்துரையாடியிருந்தோம். அவரது மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கு ஒரு இழப்பு மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த துயரமான தருணத்தை பகிர்ந்து கொள்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.