ஏறாவூர் பிரதேச செயலகம் தற்காலிக இடமாற்றம் - வீட்டின் கூரையை பிரித்த புளியமரம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையைத் தொடர்ந்து தாழ்நிலை பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனடிப்படையில் ஏறாவூர் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் வெள்ள நீர் உட்புகுந்தமையால் பிரதேச செயலகம் தற்காலிகமாக ஏறாவூர் நகர சபை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் தெரிவித்தார்.
வெள்ளம் காரணமாக வாழைச்சேனை ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்ததால் வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திற்குள் வெள்ள நீர் பிரவேசித்ததுடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆழ்கடல் இயந்திரப்படகுகளும் சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக முகாமையாளர் ஜே.ஆர்.விஜிதரன் தெரிவித்தார்.
வாழைச்சேனை ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்ததால் அந்த நீர் துறைமுகத்தில் வியாபாரம் இடம்பெறும் இடங்களில் பிரவேசித்து வியாபாரிகள் பாதிக்கப்பட்டதுடன் ஆழ்கடல் இயந்திரப்படகுகளும் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்துள்ளதாக மீன்பிடி துறைமுக முகாமையாளர் தெரிவித்தார்.
வாழைச்சேனை மீன்படி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாழைச்சேனை மற்றும் கல்முனை பிரதேசங்களை சேர்ந்த மீனவர்களது ஆழ்கடல் இயந்திரப்படகுகள் முப்பது பகுதியளவில் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்டதில் பகுதியளில் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.இம்தியாஸ் தெரிவித்தார்.
ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்திய மற்றும் கோறளைப்பற்று ஆகிய பிரதேச செயலார் பிரிவுகள் வெள்ளத்தினால் பாதிப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழைகாரணமாக வெள்ளத்தால் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 455 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகித நகர் கிராம சேவகர் பிரிவில் காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதில் 179 குடும்பங்களைச் சேர்ந்த 517 பேரும், உறவினர் நண்பர்கள் வீட்டில் மாஞ்சோலை, மீறாவோடை மேற்கு, மீறாவோடை கிழக்கு, ஓட்டமாவடி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் 276 குடும்பங்களைச் சேர்ந்த 903 நபர்;கள் வசித்து வருவதாகவும் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தெரிவித்தார்.
இவர்களுக்கான சமைத்த உணவுகள் பிரதேச செயலகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரதேச தனவந்தர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதுடன் இவர்களை கவனிப்பதற்கு பிரதேச செயலகத்தினால் அவசர அனர்த்த குழுவும் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கவனிக்கப்பட்டு வருகின்றனர்.
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 505 குடும்பங்களை சேர்ந்த 1511 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிண்ணையடி மற்றும் மீறாவடை கிராம சேவகர் பிரிவுகளில் இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் நாசிவன்தீவு கிராமத்திற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன் அங்கு 543 குடும்பங்களைச்சேர்ந்த 1623 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயந்தி திருச்செல்வம் தெரிவித்தார்.
இதே வேளை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 106 குடும்பங்களைச் சேர்ந்த 388 நபர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் உறவினர் நண்பர்கள் வீட்டில் வசித்து வருவதாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.
இதுதவிர, வெள்ளப்பெருக்கை அடுத்து பெரிதும் பாதிக்கப்பட்ட மன்னம்பிட்டி பாலம் உள்ளிட்ட பகுதி கீழுள்ள படங்களில் காணலாம்.