பெருந்தோட்ட தொழிலாளர்களின் ரூ.1700 சம்பளம் தொடர்பில் அடுத்தவாரம் தீர்மானம்! 

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தீர்மானிப்பதற்கான நியமிக்கப்பட்ட குழு எதிர்வரும் 9ஆம் திகதி கூடுகிறது. 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ரூ.1700 சம்பளம் தொடர்பில் அடுத்தவாரம் தீர்மானம்! 

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1700 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்ட நிறுவனங்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் முன்னதாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்த பணிப்புரையை வழங்கியிருந்தார்.

அதேநேரம் பெருந்தோட்ட மக்களுக்கான வேதனம் தொடர்பில் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அறியப்படுத்துமாறும் ஜனாதிபதி அந்த கலந்துரையாடலின் போது பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் பெருந்தோட்ட நிறுவனங்கள் இதுவரையில் ஜனாதிபதிக்கு தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இந்தநிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதனம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, தொழில் அமைச்சில் எதிர்வரும் 09ஆம் திகதி கூடவுள்ளது.

தொழிற்சங்கங்கள், பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றின் பிரதிநிதிகள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த சந்திப்பின் போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்பதை வலியுறுத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.