அடுத்த 36 மணி நேரத்தில் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இடைக்கிடை மழை பெய்யக் கூடிய சாத்தியம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடும் மழை காரணமாக மல்வத்து ஓயா குளத்தை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்கியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு தெற்காக இலங்கையை விட்டு மேற்கு நோக்கி நகர்ந்த காற்று சுழற்சியானது நேற்றைய தினம் லட்சதீவு அருகே காணப்பட்டது.
அது இன்று (20.12.2023 - 08.30PM) தென்கிழக்கு அரபிய கடல் பிராந்தியத்தில் கடல் மட்டத்திலிருந்து 3.1km உயரம் வரை காணப்படுகின்றது.
இதேவேளை இலங்கையின் தென் கிழக்காக நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இலங்கைக்கு அப்பால் ஒரு காற்று சுழற்சியும் நிலவிக் கொண்டிருக்கின்றது.
அத்துடன் தென்சீன கடல் பிராந்தியத்திலிருந்து அந்தமான் கடல் பிராந்தியம் ஊடாக வருகின்ற புதிய காற்று சுழற்சியுடன் இந்த காற்று சுழற்சி ஒன்றாக இணைந்து சற்று வலுவடைந்து எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையின் சில பகுதிகளில் மழையை கொடுக்கும்.