போருக்குத் தப்பி கனடாவுக்கு வந்த அகதிச் சிறுமிக்கு நேர்ந்த துயரம்

உக்ரைன் போருக்குத் தப்பி புதுவாழ்வைத் துவங்குவதற்காக அகதியாக கனடா வந்த சிறுமி ஒருத்தி, வாழ்வு துவங்கும் முன் விபத்தொன்றில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

போருக்குத் தப்பி கனடாவுக்கு வந்த அகதிச் சிறுமிக்கு நேர்ந்த துயரம்

பள்ளிக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்

கடந்த செவ்வாய்க்கிழமை காலை, மொன்றியலிலுள்ள Ville-Marie பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்திருக்கிறாள் மரியா (Maria Legenkovska, 7) என்ற சிறுமி.

மரியா, உக்ரைன் போருக்குத் தப்பி, தன் தாய் மற்றும் சகோதரிகளுடன் கனடாவுக்கு அகதியாக வந்த ஒரு சிறுமியாவார். அவளது தந்தை இன்னமும் உக்ரைனில் ரஷ்யப் படையினரை எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருக்கிறார்.

காரை மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பியோடிய நபர்

அப்போது, Juan Manuel Becerra Garcia (45) என்பவர் ஓட்டிவந்த கார் மரியா மீது மோதியுள்ளது. கார் மோதி குழந்தை கீழே விழுந்தும், அந்த நபர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பியோடியுள்ளார் Juan.

பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மற்ற மாணவ மாணவிகள் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நிற்க, அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றிலிருந்து ஓடோடி வந்த மருத்துவர்களும் செவிலியர்களும் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்கள்.

ஆனால், மரியா செவ்வாய்க்கிழமை மாலை இறந்துபோனதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

போருக்குத் தப்பி புதுவாழ்வைத் துவங்கலாம் என வந்த ஒரு குடும்பம், அதுவும் பண்டிகை காலத்தில் தங்கள் அன்பிற்குரிய பிள்ளையை இழந்து கண்ணீரில் தவித்துவருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ள நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய Juan பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.