கோப் குழு தலைவருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவின் செயற்பாடுகளை கண்டித்து அவருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
குறித்த அவநம்பிக்கை பிரேரணை அடுத்த வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 132ஆம் சரத்தின் பிரகாரம் கோப் குழுவின் தலைவரை, அந்த குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுக்கு அமைய அந்த பதவியிலிருந்து நீக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால், கோப் குழு தலைவருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.
அண்மையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது, கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, செயற்பட்ட விதம் தொடர்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.