பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
பல்கலைக்கழக பணியாளர்களை பாதிக்கும் பிரச்சினைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தீர்வினை வேண்டியும் அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்று இன்றைய தினம் நாடளவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இடம்பெற்றது.
அந்த வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்றிலும் இன்று நண்பகல் 12 மணியளவில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இன்று (12) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆறு அம்ச கோரிக்கையை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு ஆதரவாக வவுனியாப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் வவுனியா பல்கலைக்கழகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, தேசிய பல்கலைக்கழக அமைப்பை பாதுகாக்க, பல்கலைக்கழக ஊழியர்களுக்கு 40% சம்பள உயர்வு கிடைக்க வழி செய், பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள இழப்பை தடுக்க வழி செய், அனைத்து பிரிவுகளுக்கும் ஒரே நேரத்தில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை தயார் செய் போன்ற பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.