சீரற்ற வானிலையால் 92 ஆயிரம் பேர் பாதிப்பு!
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக 320 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 48 நீர்த்தேக்கங்கள் இன்னும் நிரம்பி வழிகின்றன என்றும் நீர்ப்பாசனத் துறையின் நீர் மேலாண்மைப் பிரிவின் இயக்குநர் பொறியாளர் எச்.எம்.ஜி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் காலி-ஹினிதும பகுதியில் அதிகபட்சமாக 110 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை பாதித்துள்ள சீரற்ற வானிலை காரணமாக பல பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அனுராதபுரம், விலாச்சிய மற்றும் மெதவல்கம விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.