திமுகவுக்கு எதிராக சாட்டையடி போராட்டம் - அண்ணாமலை!
திமுக அரசைக் கண்டித்து நாளை (டிச. 27) சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக அரசுக்கு எதிராக நாளை காலை 10 மணிக்கு தனக்குத்தானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்வதாகவும், திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் எனவும் சூளுரைத்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது,
நாளை காலையில் இருந்து 48 நாள்களுக்கு விரதம் இருந்து கடவுள் முருகனிடம் முறையிடப்போகிறேன். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை செருப்பு அணிய மாட்டேன். இதற்கு முடிவு தெரிந்தாக வேண்டும்.
ஒவ்வொரு பாஜகவினர் வீட்டிலும் இனி போராட்டம் நடைபெறும். ஒரே இடத்தில் போராட்டம் நடத்துவதால்தான், எங்களைக் காவல் துறையினரை ஏவி விட்டு கைது செய்கிறீர்கள்.
திமுக அரசைக் கண்டித்து நாளை காலை 10 மணிக்கு எனக்கு நானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன். கோவையில் உள்ள எனது இல்லத்தின் அருகே நாளை காலை 10 மணிக்கு எனக்கு நானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்வேன்.
பாஜகவில் உள்ள எந்தவொரு தொண்டனும் இதைச் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட சகோதரிகளுடன் நாங்கள் துணையாக இருக்கிறோம் என்பதைக் காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் எத்தனை பாலியல் வன்கொடுமைகள்?
இனி வழக்கமான அரசியல் செய்யப்போவதில்லை. அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் சிசிடிவி கேமரா இல்லை என்று செல்வது வெட்கமாக இல்லையா? சிசிடிவி கேமராவுக்கு செல்லும் (ஒயர்) இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூற வெட்கமாக இல்லையா?
நிர்பயா நிதி ஒதுக்கப்பட்டும் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் சிசிடிவி கிடையாது. நான் காவல் துறையில் இருந்திருந்தால் நடவடிக்கை வேறுவிதமாக இருந்திருக்கும்.
பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் திமுக நிர்வாகிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சுட்டிக்காட்டி பேசிய அண்ணாமலை,
விரச கதைகளைப் போன்று காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை உள்ளது. அதனைப் படித்தால் ரத்தம் கொதிக்கிறது. குற்றம் நடந்தது பெண்ணுக்கு, ஆனால் முதல் தகவல் அறிக்கையில் தவறு செய்தது ஞானசேகரனா? மாணவியா? என்று கேட்கும் அளவுக்கு உள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளனர். மாணவியை அவமானப்படுத்த பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவியை அவமானப்படுத்திவிட்டனர். ஒரு குடும்பத்தையே நாசம் செய்துவிட்டனர். நீதிமன்றத்தில் இந்த முதல் தகவல் அறிக்கை ஏற்கப்படுமா? முதல் தகவல் அறிக்கை எப்படி கசிந்தது? காவல் துறையினரைத் தவிர மற்றவர்களால் முதல் தகவல் அறிக்கை வெளியிட முடியுமா?
குற்றம் சாட்டப்பட்ட நபர் திமுகவில் இருந்ததால்தான் காவல் துறையினர் நடவடிக்கை மெத்தனமாக உள்ளது.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சிக்கு மரியாதை இல்லை என்றும் அண்ணாமலை கூறினார்.