100-ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கும் தமிழக அரசியல்வாதி!

100-ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கும் தமிழக அரசியல்வாதி!

தமிழக அரசியலில் நம்பிக்கை நட்சத்திரமாக நிற்பவர் தோழர் நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க நாளான 1925 டிசம்பர் 26ஆம் திகதியே தோழர் நல்லகண்ணுவின் பிறந்தநாள் என்பது அதிசய ஒற்றுமை.

இன்று (டிசம்பர் 26-ஆம் திகதி) 100-ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கும் ஈடு இனையில்லா அரசியல்வாதி ஐயா. நல்லக்கண்ணு
அவர்களுடன் பழகியதும், அவர் காலத்தில் வாழ்வதும்
எனக்குக் கிடைத்த மாபெரும்பேறு என்று ஆசியத் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர் மை விசாகன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில், 

கொள்கைகளில் வேறுபாடு இருந்தாலும் அனைத்துக் கட்சியினரும் மதிக்கும் ஒரே தலைவர் ஐயா நல்லகண்ணு. 

இந்த வயதிலும் போராட்டக் களத்தில் போய் நிற்கிறார். பணம், அதிகாரம், புகழ் போன்ற எதையும் தன் தலைக்குள் ஏற்றிக்கொள்ளாத அதிசயப்பிறவியாக அவர் திகழ்கிறார்.

1943-இல் கம்யூனிஸ்ட் இயக்கம் அவரை அணைத்துக்கொண்டது.

ஐயா நல்லகண்ணுவின் 80-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது அந்த கட்சி, அதைக் கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார் நம் நல்லகண்ணு!! 

தமிழக அரசு ‘அம்பேத்கர் விருது’ கொடுத்து ஒரு லட்சம் ரூபாயையும் வழங்கியது, அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின், மாவீரர் ஜீவாவின், தொடர்ச்சியாக வாழ்பவர் தோழர் நல்லகண்ணு.

தோழர் நல்லகண்ணு வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று நாம் பெருமைப்படுவோம்.

தமிழ்நாடு அரசு ஐயா நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதைக் கொடுத்தது.  

அப்போது அவர் கொடுத்த 10 இலட்சத்துடன் தன்னுடைய சொந்தப் பணம் 5 ஆயிரத்தையும் சேர்த்து ரூபாய் 10,05,000ஐ மக்கள் நலப்பணிகளுக்குச் செலவிட தமிழக முதல்வரிடமே திருப்பிக் கொடுத்து, கூடியிருந்தோரை அதிசயிக்கச் செய்தார்!

பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தொண்டர் கக்கன் வழியில், கட்சி அரசியல் கடந்து நேர்மையான, எளிமையான, அனைவராலும் பாராட்டக்கூடிய ஒரு சிறந்த மக்கள் தலைவராக ஐயா நல்லகண்ணு திகழ்கிறார்.

இன்று (26) 100-ஆவது வயதில் அடி எடுத்து வைக்கும் ஐயா நல்லகண்ணு, மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்களுக்குப் பொதுவாழ்வின் தூய்மையைச் சொல்லிக் கொண்டிருப்பார் என்பதில் ஐயம் இல்லை' என்று அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.