கிரகபிரவேசத்திற்கு முன் திடீரென சரிந்து வீழ்ந்த 3 மாடி வீடு!
தமிழ்நாட்டில் புதுச்சேரியில் திங்கட்கிழமை வாய்க்காலில் தோண்டப்பட்ட பள்ளத்தின் காரணமாக புதிதாக 3 மாடியில் கட்டிமுடிக்கப்பட்ட வீடொன்று திடீரென சரிந்து வீழ்ந்துள்ளது.
கிரகபிரவேசம் நடைபெற இருந்த நிலையிலேயே இவ்வாறு குறித்த வீடு இடிந்து விழுந்துள்ளது.
தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
புதுச்சேரி நகரத்தின் வாய்க்காலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் பெக்கோ இயந்திரம் மூலம் வாய்க்காலின் பக்கவாட்டு பகுதி சீரமைக்கப்பட்டு சுவர் எழுப்புதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக வாய்க்காலின் மண் அகழும் பகுதியில் ஜேசிபி இயந்திரம் ஈடுபட்டது. இதனால் வாய்க்கால் ஓரம் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிர்வு ஏற்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில், திடீரென அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்தது.
இதனை சற்றும் எதிர்பாராத அதன் அருகே நின்றிருந்த பொதுமக்கள், பொலிஸார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
குறித்த வீட்டுக்கு இன்னும் சில தினங்களில் புதுமனை புகுவிழா நடைபெற இருந்தது. இந்நிலையில் குறித்த புது வீடு சரிந்து வீழ்ந்துள்ளது.
வீடு கட்டுமான பணி நிறைவு பெற்றும் கிரகப்பிரவேசம் நடக்காததால் வீட்டின் உள்ளே எவரும் இருக்கவில்லை.
வெளியே நின்று இருந்தவர்களும் ஓடியதால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அதிகப்படியான மணல் அள்ளியதன் காரணமாக வீடு இடிந்து விழுந்ததாக குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.