இலங்கை அகதிகளுக்கு நிரந்தர தீர்வு? - தமிழக முதல்வருக்கு இடைக்கால அறிக்கை!

தமிழகம் முழுவதும் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழுவின், இடைக்கால அறிக்கை மாநில முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் இந்த இடைக்கால அறிக்கை கையளித்துள்ளார்.

இடப்பெயர்வு மற்றும் அகதிகள் நிபுணர்கள் தவிர, ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளர், ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த இடைக்கால அறிக்கையில், இலங்கை அகதிகளின் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வுகள் மற்றும் குடியுரிமைக்கான சட்டப்பூர்வமான வழிகள் குறித்த முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக முகாம்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்து, இது தொடர்பாக நீதித்துறையின் பரிணாம வளர்ச்சியை மதிப்பிட்டு தாம் பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக அந்த குழுவின் சட்ட நிபுணர் மனுராஜ் சண்முகசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையானது, காலனித்துவ ஆட்சிகாலத்தில் பிரித்தானியர்களால் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான குடியுரிமை தொடர்பிலும் ஆராய்ந்துள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் சிறிமா - இந்திரா காந்தி ஒப்பந்தம் உள்ளிட்ட ஒப்பந்தங்களின் படி இந்தியாவுக்கு நாடு கட்த்தப்பட்டவர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அதேநடைமுறையை பின்பற்றி இலங்கை அகதிகளுக்கும் சாதகமான தீர்வை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அகதிகளை பொறுத்தவரை, அவர்கள் இந்தியாவிற்குள் எப்படி நுழைந்தார்கள் என்பதைப் பொறுத்து, அவர்கள் சுமார் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வகையிலும் ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக, 1987 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து முகாமில் வாழ்ந்த இலங்கைப் பெற்றோருக்குப் பிறந்த ஒரு பெண், இந்தியாவின் 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் நீதிமன்ற உதவியை நாடி இந்திய கடவுச்சீட்டை பெற்றார்.

இந்த வழக்கில் இருந்து பலனடையக்கூடிய பலர் உள்ளனர்.

அத்துடன், இந்திய அதிகாரிகளிடமிருந்து பிறப்புச் சான்றிதழைப் பெற்ற அல்லது இந்திய குடிமக்களை திருமணம் செய்த பிற பிரிவுகளும் உள்ளனர்.

எனவே, இலங்கை அகதிகளுக்கான இந்திய குடியுரிமை விடயத்தில் இந்த விடயங்கள் குறித்து ஆராயுமாறு அந்த இடைக்கால அறிக்கையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.