1000 ஆண்டு பழமையான வேற்று கிரக வாசிகளின் உடல்களை காட்சிப்படுத்திய மெக்சிகோ!

‛வேற்று கிரக வாசிகள்' குறித்த கட்டுக்கதைகள்  உலா வரும் நிலையில் மெக்சிகோவில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த இரண்டு  வேற்று கிரக வாசிகளின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. 

பூமிக்கு அடிக்கடி வேற்று கிரக வாசிகள், பறக்கும் தட்டுகள் வந்து செல்வதாக நாம் சிறுவயதில் இருந்தே கதைகள் மூலமாக கேட்டு வருகிறோம். 

அதேபோல் அடையாளம் தெரியாமல் விண்வெளியில் இருந்து பறந்து வரும் பொருட்களை யுஎப்ஓ என்கிறார்கள். 

வேற்று கிரக வாசிகள் குறித்த விஷயங்கள் வெறும் வாய்வழி செய்திகளாக தான் நாம் அறிந்து வருகிறோம். அதேநேரத்தில் பூமியை போல் வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கின்றனரா? என்பதை அறிவதற்கான ஆய்வுகளை ஒவ்வொரு நாடுகளும் விண்வெளி துறையில் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் தான் தற்போது மெக்சிகோ நகரில் வேற்று கிரக வாசிகள் கண்காட்சி நடத்தப்பட்டுள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்களா? இல்லையா? என்பது தொடர்பான விவாதம் நடந்து வரும் சூழலில் அதுதொடர்பான கண்காண்சியை நடத்தி மெக்சிகோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த கண்காட்சியில் இரண்டு வேற்று கிரக வாசிகளின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மனிதர்களை போல் அல்லாமல் மிகவும் சிறிய அளவில் இரண்டு உடல்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. இந்த சடலங்கள் குறைந்தது 1,000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. 

இதுபற்றி ஜெய்ம் மவுசன் கூறுகையில், ‛‛நான் பல ஆண்டுகளாக வேற்று கிரக வாசிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். தற்போது மெக்சிகோ விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வு செய்தேன். இந்த வேற்று கிரக வாசிகளின் உடல்கள் பறக்கும் தட்டுகளில் இருந்து மீட்கப்படவில்லை. மாறாக பெருவில் உள்ள குஸ்கோவில் உள்ள ஒருவகையான பாசி சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டது. அதன்பிறகு ரேடியோ கார்பன் டேட்டிங் யுத்திகளின் டிஎன்ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனையின்போது இந்த ஜீவராசிகள் பூமியில் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கவில்லை'' என்றார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை சிலர் ஆச்சரியமாக பார்க்கும் நிலையில் பலரும் சந்தேகங்களை கிளப்பி உள்ளனர். ஆனாலும் மெக்சிகோவில் நடந்த வேற்று கிரக வாசிகள் கண்காட்சி என்பது மக்களிடம் வேற்றுகிரகவாசிகள் மற்றும் யுஎப்ஒக்கள் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.