நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகளில் 17,000 பேர் கைது!
அகில இலங்கை ரீதியாக கடந்த 12 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் இதுவரையில் 17,837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் 850 பேர் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 186 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருளுக்கு அடிமையான 1,187 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் மற்றும் விசேட பணியகத்தினால் பெயரிடப்பட்டுள்ள 4,665 சந்தேக நபர்களில் இதுவரையில், 1,375 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 10 கிலோகிராமும் 510 கிராம் ஹெரோயின், 6 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 288 கிலோகிராம் கஞ்சா, 21 லட்சத்து 10,500 கஞ்சா செடிகள் மற்றும் 71,271 போதை மாத்திரைகள் குறித்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பல கோடி பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில், பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.