மூத்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல்!
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (19) அனுஸ்டிக்கப்பட்டது.
இலங்கையில் உள்நாட்டு போர் உச்சமடைந்திருந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (19) இடம்பெற்றன.
யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பொதுச்சுடரை ஊடக அமையத்தின் செயலாளர் க.நிதர்சன் ஏற்றி வைத்தார்.
உருவப்படத்திற்கான மலர் மாலையை மூத்த ஊடகவியலாளர் ம.நியூட்டன் அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
போர் சூழலில் யாழில் இருந்து, துணிவாக ஊடகப்பணியாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன்.
பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை, சூரியன் செய்திகள், வீரகேசரி, ராவய உள்ளிட்ட பல ஊடகங்களில் சிரேஷ்ட செய்தியாளராக பணியாற்றியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டுக்குள் புகுந்த ஆயுத தாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
இதன்போது, அவர் யாழ்ப்பாண நிலவரம் தொடர்பாக தாம் எழுதிக்கொண்டிருந்த ஊடகக் கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.
கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் வீட்டில் இருந்தவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்டதுடன், கைக்குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த ஊடகவியலாளர் நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம், தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இவரது கொலை தொடர்பாக இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என்பது வருந்தத்தக்க விடயம்.
அத்துடன், ஊடகவியலாளர் நிமலராஜனின் கொலை தொடர்பில் எவரும் தண்டனைக்கு உட்படுத்தப்படவில்லை.
இந்தநிலையில், அண்மையில் பிரித்தானியாவில் வைத்து கொலை தொடர்பான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அந்நாட்டு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் சர்வதேச நினைவு நாள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினமும் இன்று (19) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபியில் அனுஷ்டிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் குறித்த நினைவுகூரல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது இதுவரை உயிர்நீத்த ஊடகவியலாளர்கள், சிரேஷ்ட ஊடகர் நிமலராஜன் மற்றும் இஸ்ரேல்- பாலஸ்தீன போரில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூரப்பட்டனர்.
இந்த நினைவு கூரலின் போது மாவட்டத்திலுள்ள பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.