ஓர் உயிர் பிரிந்தது - ஏனைய மூன்று தமிழர்களின் கோரிக்கையையாவது நிறைவேற்ற வேண்டும்!

ஓர் உயிர் பிரிந்தது - ஏனைய மூன்று தமிழர்களின் கோரிக்கையையாவது நிறைவேற்ற வேண்டும்!

32 ஆண்டுகள் சிறை வாழ்க்கையில் இருந்து 2022 நவம்பர் 11ஆம் திகதியன்று விடுதலை செய்யப்பட்ட மூன்று ஈழத் தமிழர்களையும் திருச்சி சிறப்பு முகாமில் தனிமைச் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி மாநில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக்கு உள்ளான நிலையில், இந்திய உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்ட, சாந்தனின் மரணம் குறித்து பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பேருக்கும் உண்மையான சுதந்திரத்தை திராவிட முன்னேற்றக்கழக அரசாங்கம் வழங்கவில்லை என்று பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
 
முகாமில் உடல் பயிற்சி கூட செய்ய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மற்றவர்களுடன் பழக அனுமதிக்கப்படவில்லை.

அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்புவதில் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

தற்போது முகாமில் மீதமுள்ள 3 பேரில் ஜெயக்குமார் தவறான சிகிச்சையால் கண் பார்வையை இழந்துள்ளார்.

ரொபர்ட் பயஸ் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

முருகன் வேறு நாட்டுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள பழனிச்சாமி, அவர்களின் கோரிக்கைகளை திராவிட முன்னேற்றக்கழக அரசாங்கம் ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.