அமலநாயகி அமல்ராஜ் தீவிரவாத தடுப்பு பொலிசாரால் விசாரணை!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமலநாயகி அமல்ராஜிடம் தீவிரவாத தடுப்பு பொலிசார் விசா​ரணை​  மேற்​கொண்டுள்ளனர்.

இது குறித்து அவர் எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கையில், சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் என்னுடைய வாக்கு மூலங்கள் பெறப்பட்டன.  

இரண்டு பெரிய கோவைகளில் என்னுடைய விபரங்கள் உள்ளடக்கப்பட்ட பிரதிகள் அவர்களிடம் இருந்தன. 

என்னைப் பற்றிய முறைப்பாடுகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கொழும்பில் இருந்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், என்னுடைய முழு விபரங்களும் கோரப்பட்டதாகவும், அதனால் என்னை விசாரணை செய்வதாகவும் சொல்லப்பட்டது. 

சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களோடு உங்களது தொடர்புகள் எவ்வாறு இருக்கிறது. 

அவர்களுடன் நீங்கள் தொடர்பில் இருக்கின்றீர்களா? எனக் கேட்டார்கள்.

தடை செய்யப்பட்ட இயக்கம் அல்லது அந்த இயக்கம் இல்லையெனக்  கூறி நீங்கள்தானே சொன்னீர்கள். 

பிறகு எப்படி எல்டிடிஈ என்ற பெயர் வருமென எனக்குத் தெரியாது. அதனை நீங்கள்தான் தேடிப் பார்க்க வேண்டும் என்று கூறனேன்.

அவ்வாறு எல்டிடிஈ என்ற பெயர் சொல்லிக்கொண்டு வருபவர்களுடன் எமக்குத் தொடர்பு இல்லை. அந்தப் பக்கத்தை நாங்கள் பார்க்கவும் இல்லை. 

அதனை நீங்கள் தேடிக் கண்டுபிடியுங்கள் எனச் சொன்னேன். டயஸ்போரா இந்த போராட்டத்திற்கு காசு தருவதில்லையா எனக் கேட்டார்கள்.

இதுவரை தரவில்லை எனச் சொன்னேன். தொடர்பு இருந்தால் தாங்கள் என்றேன்.

இந்த விசாரணையின் போது என்னை பயங்கரவாதியாகவும், எல்டிடிஈ அமைப்பை மீள் உருவாக்கும் ஒருவராகவும், கடந்த காலத்தில் இவ்வாறான போராட்டங்களை செய்து அரசாங்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் ஒரு அமைப்பாகவும் கருதுகிறார்கள், அதுதான் அவர்களின் அபிப்பிராயமாக இருந்தது. 

அனுப்பட்டிருந்த அந்த கோவையில் முற்றுமுழுதாக நான் ஒரு பயங்கரவாதியென எழுதப்பட்டிருந்தது. 

முழுமையாக எங்களை ஒரு பயங்கரவாதியாக முத்திரை குத்தி எங்களுக்கு உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தி, இந்த போராட்டத்தை நிறுத்த வேண்டும். 

சர்வதேச ரீதியான அழுத்தங்கள் இவர்களுக்கு வருவதால் எங்களை இப்படியான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி, உதாரணமாக நான் ஒரு விசாரணைக்கு வந்தால் நான்கு தாய்மார் அச்சத்தில் இதனை (போராட்டத்தை) விட்டுவிடுவார்கள். 

இந்த போராட்டத்தை அழிக்க வேண்டும் என்பதே ஒரேயொரு நோக்கம். இப்படியொரு காணாமல் போனமை என்ற விடயம் இல்லை என்றதையும் ஏற்படுத்தி, மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையில் கொணடு போக வேண்டுமென்பதே இவர்களின் நோக்கம்" என்று அவர் குறிப்பிட்டார்.