ஆரையம்பதி பிரதான வீதியில் ஒரு வருடத்தில் 25 விபத்துக்கள் - ஆறு பேர் மரணம்!
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி நெடுஞ்சாலையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்கோடு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆலோசனைகு அமைய மண்முனைபற்று பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்யானந்தி தலைமையில் இன்று (15) நடைபெற்றது.
அரையம்பதி வைத்தியசாலை தொடக்கம் பொதுச் சந்தை வரையிலான சுமார் 150 தொடக்கம் 200 மீட்டர் இடைவெளியில் கடந்த ஒரு வருடத்திற்குள் 25 இற்கும் மேற்பட்ட விதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
இதில் பாதையை கடக்க முற்பட்ட 06 பேர் மரணமடைந்தனர். குறித்த பாதை மிகவும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்தி பாதுகாப்பான பாதசாரிகள் கடமையினை எவ்வாறு அமைப்பது, வீதி விபத்துக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் உரிய நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மண்முனைப்பற்று பிரதேச சபை செயலாளர் சர்வேஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன், காத்தான்குடி பொலிஸ்நிலைய துணை பொறுப்பதிகாரி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட பல துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.